அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அண்மையில் உத்தரவிட்டது. மேலும் H-1B விசா தொடரான பல புதிய விதிகளும் அறிவிக்கப்பட்டன.
இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.
H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.
இந்நிலையில் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள கட்டண உயர்வு இந்தியர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், H-1B விசா திட்டம் குறித்து தனது முந்தைய நிலைப்பாடுகளில் இருந்து மாறி, அதற்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய டிரம்ப், "தனது நிர்வாகம் அமெரிக்கர்களுக்கே வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இருப்பினும் சிக்கலான, பல உயர் தொழில்நுட்பப் பணிகளுக்குத் தேவையான திறமையான பணியாளர்கள் அமெரிக்காவில் இல்லை, உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களை அமெரிக்கா ஈர்ப்பது மிக அவசியம்" என்று தெரிவித்தார்.


