தலைக்கு மேலிருந்த வானம்
தொலைந்துபோன பால்யவயதில்
எங்கிருந்தோ விழுந்த
அமிர்த தாரை உன்குரல்
10வயதில் நான் சுகித்த
மனிதக் குயிலின் மதுரம்
துடைத்துவைத்த
நட்சத்திரங்களுக்குத்
தூக்கிச் சென்றது உனதுகுரல்
‘மலர்ந்தும் மலராத’ பாடலில்
நீ விசும்பியபோது
விசும்பியது விசும்பு
‘சிட்டுக்குருவி முத்தம்
கொடுத்த’போது
மீசை முளைக்காத வயதில்
ஆசை முளைத்தது
‘கங்கைக்கரைத் தோட்ட’த்தில்
கரைந்தபோது
ஒரு நாத்திகன் கடவுளானான்
‘சொன்னது நீதானா’வென
விம்மியபோது
கண்ணீரின் ருசி
உப்பெனக் கண்டது உதடு
கருணையின் கண்ணீரை
தாய்மையின் தாய்ப்பாலை
காதலின் வேர்களை
சிருங்காரத்தின் நுனிகளை
அசைத்துப் பார்த்தது
உனது கானம்
அத்தர் பூசியவன்
அது எந்தநாட்டு ரோஜாவென
மறந்துபோவது மாதிரி,
இசைத்தவனையும்
எழுதியவனையும்
மறக்கடித்து விடுகிறது உன்பாடல்
தாய்மொழியின்
சௌந்தர்யங்களையெல்லாம்
சொல்லிக்கொடுத்த
சுசீலா தேவி
நீ இருக்கிறாய் என்பதால்
இருக்கிறது இசை
என்னவொரு சாபம்!
புதிய தலைமுறைக்குத்
தெரியவில்லை உன்னை
போகட்டும்;
செவிசெத்த சமூகத்தை
மன்னிப்பதே மரியாதை தாயே!
மந்திரத் தமிழ் வளர்த்த
சுந்தரத் தெலுங்கே!
இந்தப் பிறந்தநாளில்
உலகில் பிறக்கும்
ஒவ்வொரு பூவும்
உன் சிரசு சேரட்டும்


