TamilsGuide

மொழி எதுவாயிருந்தால் என்ன, இனிமையாக உள்ளது குயிலின் குரல்  பி.சுசிலா 

"மொழி எதுவாயிருந்தால் என்ன, இனிமையாக உள்ளது குயிலின் குரல்." எங்கோ படித்த இந்த வரிகளின் அர்த்தம் இசையரசி பி.சுசிலா அம்மாவுக்கு 100 சதவீதம் பொருந்தும்.

கோடானு கோடி ரசிகர் உள்ளங்களை வசப்படுத்திய குரலுக்கு வசமாகாத இதயம் உண்டோ ❤

தேனில் பாலையும் சர்க்கரையையும் கலந்தால் எவ்வளவு தித்திப்பாக இருக்குமோ, அவ்வளவு தித்திப்பானது பாடகி பி.சுசீலா அம்மாவின் குரல். தென்னிந்தியாவின் இசைக்குயில் இவர். அரை நுாற்றாண்டுக்கும் மேலாக தென்னிந்திய சினிமா இசையில் ஆதிகம் செலுத்திய பெண் குரல் இவருடையது.

இசைத்துறையில் இந்த குயில் பாடத் தொடங்கி 67 ஆண்டுகள் ஆகி உள்ளன.

கணீர் என்ற வெண்கலக் குரல்களுக்கு நடுவே, மெல்லிய கீற்று ஒன்று சன்னமாக ஒலித்தது. தேனினும் இனிமையாக,மனதை வருடத் தொடங்கியது! இசையமைப்பாளர்கள் என்ன உணர்வினை எதிர்பார்க்கிறார்களோ, அதை விட கொஞ்சம் அதிகமாகவே அள்ளி தெளித்து விடுவார் சுசிலா.அதனால்தான் பின்னணிப் பாடகிகளில் முன்னணிப் பாடகி என்ற இடத்தை வெகுவிரைவில் பிடித்துக் கொண்டார்.

தாலாட்டு, சோகம், விரகதாபம், காதல், வீரம், ஏக்கம், ஊடல், குத்து என ஒவ்வொன்றிலும் ராகத்தின் செவ்வியல்தன்மை இவரது பாடல்களில் தென்பட்டது. நாம் எங்கு பயணப்பட்டாலும், எந்த நிலையிலிருந்தாலும் சுசிலா அம்மா வின் இனிய குரல் காற்றிலே கலந்து செவிகளினூடே நுழைந்து நெஞ்சை தேனாய் நனைத்து விடும். 'இலங்கை வானொலி' பிரியர்களை அங்குமிங்கும் நகர விடாது செய்தவர் சுசிலா.

'உச்சஸ்தாயி, -கீழ்ஸ்தாயி... எதுவாயிருந்தால் எனக்கென்ன' என்று அதனை தன் முகபாவனையில் காட்டிக் கொள்ளாமல், உதட்டை தவிர உடலில் வேறெந்த பாகமும் அசையாமல் பாடுவதே சுசிலா அம்மாவின் சிறப்பு. நெடிய இசைப் பயணத்தை இனிமையாக முடித்து கொடுத்துள்ளார் சுசிலா. அவரது பாடல்கள் அனைத்தும் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.

தென்றலை கௌரப்படுத்தக் கூடிய குரல் அது, இனிமை வற்றாத குரல் அது, இயற்கையை வணங்கக் கூடிய குரல் அது. எண்ணற்ற ஆண்டுகள் கடந்தாலும் பழுதாகாத, கரைந்து போகாத குரல் அது.

உணர்ச்சிக் குரலில் பாவங்களை வெடிக்கும் திறன் சுசிலாவுக்கு மட்டுமே சொந்தம். அவர் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வேண்டும் என்பதே அவரது இசை அடிமைகள் ஒவ்வொருவரின் நெஞ்சார்ந்த விருப்பம். காற்றுக்கு அழிவில்லை. மொழிக்கும், இசைக்கும் அழிவில்லை... சுசிலா அம்மாவின் குரலுக்கும்தான்!

Verona Sharmila
 

Leave a comment

Comment