TamilsGuide

பிரபாஸ்- பவன் கல்யாண் கூட்டணியை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த என்ன படம் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகிறார். இந்த படத்திற்காக அவர் சண்டை மற்றும் தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதோடு இப்படத்திற்காக அவர் புது கெட்அப்பில் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது.

கதாநாயகனாக நடிக்கும் முதல் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் ரூ.35 கோடி சம்பளம் பெறுகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் அறிமுக நடிகர்களில் ஒருவராகிறார்.

பல நடிகர்களை இயக்கி வெற்றிப் படங்களை வழங்கிய பிறகு, லோகேஷ் கதாநாயகனாக அறிமுகமாவதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அவர் ஒரு ஹீரோவாக வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதனிடையே, லோகேஷ் கனகராஜ் ஒரு பெரிய பட்ஜெட் படத்தை இயக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, பிரபாஸ் மற்றும் பவன் கல்யாண் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் புதிய படம் குறித்த கூடுதல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment