பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இப்படத்தில் பிரித்விராஜ் வில்லனாக நடிக்கிறார். படத்தில் அவருடைய காதாபாத்திர பெயர் கும்பா. டாக்டர் ஆக்டோபஸ் போன்று வில்லன் காதாபாத்திரத்தில் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக பெயர் வைக்கப்படவில்லை. தற்போது குளோப் ட்ரோட்டர் (Globe Trotter) என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடும் நிகழ்ச்சி வருகிற 15-ந்தேதி ராமோஜி திரைப்பட நகரில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சி ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதை முன்னணி நடிகையும், பின்னணி பாடகியுமாக ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.


