TamilsGuide

ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும் - மாதம்பட்டி ரங்கராஜ்

தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார்.

இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, "ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும். அதில் நான்தான் தந்தை என தெரியவந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்க தயார்" என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. மேலும், இருதரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை வரும் 14ம் தேதி தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 
 

Leave a comment

Comment