அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் அதிகளவில் இறக்குமதி வரி விதித்தார்.
அவரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பினாலும் தனது முடிவில் அவர் பிடிவாதமாக இருந்து வருகிறார். இறக்குமதி வரிகள் தான் தனது வலிமையான பொருளாதார ஆயுதம் என்றும் இந்த கொள்கை அமெரிக்காவை வலிமையானதாகவும், செல்வந்தராகவும் மாற்றி உள்ளது என்றும் அவர் கூறி வருகிறார். மேலும், அவர் தனது வர்த்தக கொள்கைகளை எதர்ப்பவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலை தளபக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
இறக்குமதி வரிகள் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாய் ஈட்டி வருகிறது. இந்த பணம் 37 டரில்லியன் டாலர் தேசிய கடனை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. விரைவில் எனது நிர்வாகம் அதனை செலுத்த உள்ளது.
இந்த வருவாய் மூலம் அதிக வருமானம் உள்ளவர்களை தவிர அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் தலா 2 ஆயிரம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 லட்சத்து 77 ஆயிரம்) ஈவுத்தொகை வழங்கப்படும்.
தனது நிர்வாகம் அமெரிக்காவை மிகவும் பணக்கார நாடாகவும், மிகவும் மதிக்கத்தக்க நாடாகவும் மாற்றி இருக்கிறது. கிட்டத்தட்ட பணவீக்கம் எதுவும் இல்லை. பங்கு சந்தை விலையில் சாதனை படைத்து இருக்கிறது.
எனது வரிக்கொள்கை உள்நாட்டு முதலீடு அதிகரிப்பதற்கு வழி வகுக்கிறது. கட்டணங்களால் மட்டுமே அமெரிக்காவில் தொழில்கள் குவிகின்றன. வரிகளை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள். அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.


