முடிவெடுத்தேன். அவனைச் சுட்டுக் கொல்வது என்று. அந்த ஆக்ரோஷமான எண்ணம் என் உள்ளத்தின் ஆழத்தில் வேரூன்றி இருந்தது. கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை; அது சாத்தியமற்றதாகவும் தோன்றியது. வீட்டிற்கு விரைந்தேன். திறந்த டிராயருக்குள், கருநாகமென அந்த ரிவால்வர் நெளிந்தது. அதை எடுத்தேன். என் விரல்கள் அதன் குளிர்ச்சியை உணர்ந்தன. விரைந்தேன் அவன் வீடு நோக்கி.
பின்புறச் சுவரருகில் நின்றிருந்தான் அவன். சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தை அவன் பக்திப் பரவசத்துடன் வணங்கிக் கொண்டிருந்தான். ட்ரிகரில் கை வைத்தேன். என் வாழ்வின் ஒரு துயரக் கணம் மனத்திரையில் வந்து போனது. அது என் விழிகளை மேலும் சிவக்கச் செய்தது. ஒரு அழுத்தம்தான். அவன் தலை சிதறும்.
ஒன்று... இரண்டு... மூன்று...
கோணத்திலிருந்து அவன் சற்றே விலகினான். இப்போது அந்தப் புகைப்படம் என் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. பலமான அதிர்ச்சிக்கு ஆளானேன். அது மறக்கக் கூடிய சித்திரமா? என் வாழ்வின் போக்கையே திசை திருப்பிய பிம்பமல்லவா அது?
அவன் என்னைப் பார்ப்பதற்குள் ரிவால்வரை மறைத்தேன். இந்த விந்தையை என்னென்று சொல்வது? யாரென்று தெரியாத அவன் வணங்கிய அந்தப் புகைப்படத்தில், என் தாயுடன் நான்; அருகில் என் தம்பி. அதை அவன் வணங்குகிறான் என்றால்... அப்படியானால் அவன்...? என் தம்பியா? என்னே விசித்திரம் நிறைந்தது என் வாழ்க்கை!
சுயசரிதையின் தொடக்கம்
வாருங்கள்! என் கதையை கேளுங்கள்!
ஒரு பண்டிகைத் திருநாளில், என் தாயுடன் நானும் என் தம்பியும் இணைந்து எடுத்தப் புகைப்படம் அது. அதைத் தாயிடம் தர, அவள் என் தம்பியிடம் கொடுத்தாள். அதைப் பிடுங்க நான் முயற்சித்தபோது, அவன் பிடிவாதம் செய்தான். இங்கே நீங்கள் என் சுபாவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நான் சற்று முரட்டுக் கோபம் கொண்டவன். என் ஆளுமையைத் தாண்டி எவரும் செல்வதை விரும்பாதவன். நான் ஆசைப்பட்ட பொருளை எவரும் கவர நினைப்பதை என்னால் விட்டுத்தர முடியாது.
பிரச்சினைக்கு வருகிறேன். புகைப்படம் தராத கோபத்தில், அதைப் பிடுங்கி அவன் தலையில் அடித்தேன்.
ரத்தம்... ரத்தம்... ரத்தம்...
நானும் பயந்தேன். சினம் கொண்ட என் தாய், என் காலில் சூடு வைத்தாள். "வீட்டிற்கே வராதே!" என்று ஆத்திரத்தில் அவள் சொன்னபோது, இயலாமையும், கோபமும் என்னை உந்தித் தள்ள, ரயிலில் ஏறினேன்.
ஒரு டிக்கெட் பரிசோதகரால் அவமானப்பட்டபோது, ஒருவர் எனக்கு உதவினார். என் கதையைக் கேட்டார். என் நிலைமையைப் புரிந்துகொண்டார். என்மீது ப்ரியம் கொண்டு, தம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தன் சிறு மகளைக் காட்டி, "இவர்தான் உன் அண்ணன்" என்று அறிமுகம் செய்தார்.
அவர் நியாயமாகச் சம்பாதிப்பவரில்லை என்பதை அவரே வெளிப்படையாகச் சொன்னார். அதுவே எனக்கு நியாயதர்மமாகக் காட்சியளித்தது. அவர் அண்டர்கிரவுண்ட் தாதா; எனக்குக் காட்பாதர். அந்த நிழலுலகில், அவரின் நிழலில் நான் ஐக்கியமானேன். நான் இப்போது சோமு இல்லை; ராஜா. காட்பாதரின் வாரிசு.
ராஜா யுவராஜா
பணம், பணம், பணம் - சகல வழிகளிலும் சம்பாதித்தோம். இந்தக் கொடியப் பாதையில் ஒருநாள், ஒரு கள்ளக்கடத்தல் சம்பவத்தில், போலீஸ் சுட்ட குண்டு என்மீது பாய நேர்ந்தபோது, அதைத் தான் தாங்கி என்னைக் காத்தார் அவர். இறக்கும் தருவாயில், என்னிடம் ஒரு சத்தியம் கேட்டார்: "எப்பொழுதும் என் மகளின் உண்மையான அண்ணனாகவே இருக்க வேண்டும். என்னுடைய கடந்த காலத்தை யாருக்கும் சொல்லக் கூடாது." சத்தியம் செய்தேன். அதுதான் என் பிற்கால வாழ்வைத் தடம் புரள வைக்கும் என்பதை யார் அறிவார்?
எல்லாவற்றுக்கும் ராஜா. பணம், அதிகாரம், படைபலம் - இத்தியாதி, இத்தியாதி... "ராஜா யுவராஜா... நாள்தோறும் ஒரு ரோஜா..." இதுதான் நான் இப்போது. கதையின் அடிப்படைக்கு வரவில்லையே என்று குழம்பாதீர்கள். நான் பக்கம் வந்துவிட்டேன். சற்றுப் பொறுங்கள்.
சத்தியத்தின் சிக்கல்..
"தினந்தோறும் ஒரு ரோஜா" என்று என் வாழ்வு நகர்ந்துகொண்டிருந்த வேளையில்தான் ராதாவைப் பார்த்தேன். அவளைப் பார்த்தபின் என் நடவடிக்கைகளில் ஒரு மாறுதல் நிகழ்வதைத் தவிர்க்க முடியவில்லை. அவள் என் அலுவலகப் பியூன் ராமையாவின் மகள். என் வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தம் வேண்டுமல்லவா? ராமையாவிடம் பேசினேன். அவளைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்றேன். ராமையாவுக்கு மிகவும் சந்தோஷம்.
இந்த நிலையில், அவன் வந்தான். பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாகக் காட்சியளித்தான். வேலை கேட்டான். அப்போது ஏதும் வேலை காலி இல்லை. அவன் பரிதாபக் கோலம் வேலை கொடுக்க வைத்தது. அவன் நேர்மை, வேலைத் திறமை எனக்குப் பிடித்தது.
இப்படியே சில நாட்கள்... அன்று கேள்விப்பட்டேன், அவன் ராதாவின் வீட்டில்தான் தங்கி இருக்கிறானாம். சிறிது சலனமானேன். என் கெஸ்ட் அவுசுக்கு அவனை மாற்றினேன். இது அவன் கௌரவத்திற்காக மட்டுமல்ல; என் கௌரவமும் இதில் அடங்கியிருப்பது எனக்கு மட்டும்தானே தெரியும்? நல்ல சம்பளம் கொடுத்தேன்; நல்ல வாழ்வு கொடுத்தேன். வளம் பெற்றான். சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அது எனக்கும் சந்தோஷமே!
நில்லுங்கள்! அவனைப் பற்றியே கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே! என் கதை என்ன ஆவது? இங்கே உங்களை ஆசுவாசிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ராதாவுக்கு என் நடத்தைகள் பிடிக்கவில்லையாம். என்னை திருமணம் செய்ய விருப்பம் இல்லையாம்.
இப்பொழுது என்னை நான் ஆசுவாசிப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவசரப்படாதீர்கள்! பக்கம் வந்துவிட்டோம்.
தீபத்தின் ஒளி..
அன்று அடர்த்தியான மழை. மரத்திற்குக் கீழே ராதா, அவன்... தனிமையில்.
நான் கேள்விப்பட்டது உண்மைதான். ஆத்திரம் பொங்கியது. விரைந்தேன். ரிவால்வரை எடுத்தேன்... மேல் பாராவை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். என் தாய் போட்டோவில். அப்படியானால் அவன்... என் தம்பியா? அய்யோ! என்ன தவறு செய்ய இருந்தேன்!
மறந்தேன் அனைத்தையும்; ராதா உட்பட. ராதாவுக்கும், என் தம்பிக்கும் திருமணம் செய்து வைத்தேன். என் தம்பி என்ற உண்மையை யாருக்கும் சொல்லவில்லை. காரணம், பெரியவருக்கு நான் செய்து கொடுத்த சத்தியம். என் தம்பி - கண்ணன். அவனை என் பிஸினஸின் அனைத்துத் துறைகளிலும் ஈடுபடுத்தினேன். அவனை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் என் ஆசை.
என் பிசினசைப் பற்றி சொல்லவே இல்லையே! அதைச் சொல்லாவிட்டால் கதை எப்படி நகரும்? நகரத்திலேயே பெரிய கம்பெனி. எப்பொழுதும் பரபரப்பு. நிறையத் தொழிலாளர்கள். தொழில் வளர்ச்சிக்காகச் சில மனிதர்களைத் திருப்தி செய்ய வேண்டியிருக்கிறது. மது, மாது என்று நிறைய.
இதை ஏன் இங்கே சொல்ல வருகின்றேன் என்றால், காரணம் உண்டு. கண்ணன் மேல் நான் காட்டிய அதிகப்படியான அக்கறை, மேனேஜருக்குப் பொறாமை உணர்ச்சியைத் தூண்டியுள்ளது. ஒரு நாள் கண்ணன் குடித்துவிட்டு வந்தான். ராதாவுக்குப் பிடிக்கவில்லை. சில நாள் கழித்து மறுபடியும் இதே பிரச்சினை. மேலும் பெண்களின் சகவாசமும் கூடுகிறது. இவையெல்லாம் ஒரு குடும்பத்தை நிலை குலைய வைக்கும் அல்லவா? அதுதான் நடந்தது. நான் வருந்திக் கொண்டிருக்கிறேன், கூடவே கோபமும்.
இது தவிர, நான் ராதாவை நேசித்த விஷயம் கண்ணன் தெரிந்து தவறான அர்த்தம் கொள்கிறான். நான்தான் இதற்கெல்லாம் காரணம் என்று ராதா நினைக்கிறாள். பழி வாங்குகிறான் என்று தப்புக் கணக்கு போடுகிறாள். மேனேஜரின் சதியால் ராதாவின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
மேனேஜரை அழைத்தேன். வந்தார். சொன்னேன்: "உன் சம்பள பாக்கி எல்லாம் செட்டில் பண்ணியாச்சு. ஆபீஸில் வாங்கிக்கோ. உன் தலையை இந்த ஊருக்குள்ளேயே பார்க்கக் கூடாது. பார்த்தால் தலை இருக்காது!" கடும் எச்சரிக்கைதான்.
பிரச்சினைகளைக் களைய முடிவெடுத்தேன். அந்த உண்மை எல்லோருக்கும் தெரிய வேண்டும். அதே சமயம், என் சத்தியமும் காக்கப்பட வேண்டும். எப்படி?
ஒரே வழி! நான் உயிருடன் இருக்கும் வரைதானே என் சத்தியம்? ஒரு தீபம் தன்னையே உருக்கி வெளிச்சம் கொடுக்கிறது. அதேபோல், நான் வெளிச்சம் கொடுக்கப் போகிறேன். என்னைத் தடுக்காதீர்கள்! நீங்களும் என்னைப் போல் சத்தியம் செய்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.
நடிகர் திலகத்தின் பிரகாசம்..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இதில் நடித்தால், இது 'ஸ்டைல்' செய்வதற்கு வாய்ப்புள்ள கதை என்று சொன்னால் நம்ப முடியாததுதான். ஆனால், அவர் நடித்தால் எந்தக் கதையும் ஸ்டைலிஷான படமாக மாறிவிடும் தான். படத்தின் கதை கேட்கும்போதே, இப்படத்திற்கு இப்படித்தான் வந்து நிற்க வேண்டும் என்று முடிவு செய்திருப்பார் போலும். இதற்கு முன் வந்த 'உத்தமன்', 'சித்ரா பௌர்ணமி', 'ரோஜாவின் ராஜா' போன்ற படங்களை விட, இதில் சிக்கென்று இருப்பார். அங்க அசைவுகளில் நவீனம் மிளிரும். எண்ணங்களில் மட்டும்தான் முற்போக்குச் சிந்தனைகளா? அதை நடிப்பிலும் காட்டியிருப்பார் நடிகர் திலகம். ஷாட் பை ஷாட், அணு அணுவாக அள்ளி வீசியிருப்பார் ரசனைப் பாவங்களை, படத்தில் அவர் சுண்டி எறியும் சிகரெட்டைப் போல. சுருங்கச் சொன்னால், இது தீபத்தின் வெளிச்சமல்ல; சூரியனின் பிரகாசம்!
செந்தில்வேல் சிவராஜ்...


