TamilsGuide

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தீவிரமாக முன்னெடுக்கப்படும் போதை ஒழிப்பு நடவடிக்கைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மதுபாவனையினை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை பிரதேசசபை,பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்,பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதியின் போதையற்ற நாட்டினை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் போதைப்பொருள் அற்ற பிரதேசத்தினை உருவாக்கும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாதாமடு பகுதியில் இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

வவுணதீவு பிரதேசசபையின் தவிசாளர் கோபாலபிள்ளை,பிரதி தவிசாளர் டிஸாந்த் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ் இந்த சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.

மாதாமடு ஆற்றங்கரையோரத்தில் கசிப்பு உற்பத்திசெய்யப்பட்டு வவுணதீவின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுவந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஐந்து பறல்களில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 1000லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திகான கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதாக வவுணதீவு பிரதேசசபையின் பிரதி தவிசாளர் டிஸாந்த் தெரிவித்தார்.

வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் சட்ட விரோத போதைவஸ்து மற்றும் கசிப்பு உற்பத்திகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் இதற்கு பொதுமக்கள் தமது ஆதரவினை வழங்கவேண்டும் எனவும் பிரதேசசபையின் பிரதி தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

Leave a comment

Comment