1945-க்கும், 1950-க்கும் இடைப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் கண்ணதாசன் தொடங்கிய எழுத்துப்பணியும், கவிதை பாடுவதுமான அந்த வித்தை 1957-1958 வரையில் நத்தையாகத்தான் நகர்ந்து கொண்டிருந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவர் கொண்ட இணைப்பு, ஈடுபாடு மற்றும் 'பேரறிஞர்' அண்ணாவின் மேடைப்பேச்சு, எழுத்து, மேலும் 'புரட்சிக்கவிஞர்' பாரதிதாசனின் கவிதைகள் - இவை எல்லாமாகச் சேர்ந்து கண்ணதாசனின் தமிழுக்கும், அறிவிற்கும் தக்க 'உரம்' போட்டு வளர்த்தன.
திரைப்படத்துறைத் தாழ்வாரத்தில் அவர் தவழ்ந்து கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் பலராலும் புகழப்பெற்று, அவரது கொடி பட உலகில் பறந்து கொண்டிருந்தது. ஒருமுறை கண்ணதாசனே கூறினார்:-
"பாடல்கள் எழுதுவதில் எனக்குப் போட்டியாக வேறு யாரையுமே நான் கருதவில்லை. ஒரே ஒருவர் மட்டுமே எனக்குப் போட்டியாக இருக்கிறார். அவர்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! அவர்தான் என்னை முந்துகிறார்."
1960-ல் இருந்து 1980 வரையில் அந்த 20 ஆண்டுகளிலும் திரைப்படப்பாடல் துறையில் கண்ணதாசன் ஈடும் இணையும் இன்றித் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்தார்.
'காலம்' கண்ணதாசன் வீட்டுக் கூரையைப் பிய்த்துக்கொண்டு காசுகளைக் கொட்டியது. செந்தமிழைச் சேமித்து வைக்கத் தெரிந்த செட்டுக்கு சிக்கனத்திற்குப் புகழ் பெற்ற செட்டியார் குலத்தில் பிறந்த இந்தச் செல்வப் புதல்வருக்கு பாட்டெழுதி ஈட்டிய பொருளைப் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கமட்டும் ஏனோ தெரியவில்லை.
தனக்கு வந்த பொருளை வரவில் வைக்காமல், படங்கள் தயாரித்தும், அரசியல் சேற்றில் கால் பதித்து அதனால் தேவை இல்லாத பல காரியங்களைச் செய்தும் அவர் தேடிய திரவியத்தை அதன் அருமை தெரியாமல் செலவு செய்தார் - அல்ல செலவழித்தார்
1960-களில் என் கண் எதிரிலேயே தேவரண்ணன் தனது ஒவ்வொரு படத்திற்கும் ஒரே தவணையில் 20, 25 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டை ஒரு தட்டில் பழங்களுடன் வைத்துக்கொடுப்பார். கவிஞர் அதை அப்படியே கொண்டு போய் மொத்தமாக தன் சொந்த புரொடக்ஷனுக்காகவோ அல்லது அதற்காக வாங்கிய கடனுக்காகவோ கொடுத்து விடுவார். அந்த நாட்களில் இருபத்தைந்தாயிரம் ரூபாய் என்பது ஒரு நல்ல புகழ் பெற்ற நடிகருடைய சம்பளம் ஆகும்.
அந்நாட்களில் எம்.ஜி.ஆர். படமாகட்டும் அல்லது சிவாஜி படமாகட்டும் கவிஞரும் நானும் கண்டிப்பாக இருப்போம். அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன், அண்ணன் கே.வி.மகாதேவன் இருவர் இசை அமைக்கும் பெரும்பாலான படங்களிலும் நாங்கள் எழுதுவோம்.
அவ்வப்போது, அந்தந்த படங்களில் நான் எழுதிய நல்ல வசனங்களை எடுத்துக்காட்டி என்னைப் பாராட்டிப் புகழ்ந்து பேசுவார்.
'தாமரைபோல இன்னொரு மலர் இல்லை
தாஸ் போல இன்னொரு வசனகர்த்தா இல்லை'.
இந்த அன்பின் ஆதாரத்தில், உறவும் - உரிமையும்
கொண்டு கவிஞரிடம் நான் இப்படிக் கூறுவேன்:-
'அண்ணே! படம் எடுக்கிறதையும், அரசியலையும் அடியோடு விட்டுத் தொலைச்சிட்டு, பாட்டெழுதுறதுல மட்டும் கவனம் செலுத்துனீங்கன்னா, நீங்க சம்பாதிக்கிற பணத்தை வச்சு இந்த தியாகராயநகர்ல உங்க ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு வீடு வீதம் பத்துப்பன்னிரெண்டு வீடுகளை வாங்கலாமே'.
இதற்கு அவருடைய பதில் என்ன தெரியுமா?
'தம்பி! நீ கொடுத்து வச்சவன். அதனாலதான் கடவுள் உனக்குக் கெட்டிக்காரத்தனத்தைக் கொடுத்திருக்காரு. ஆனா நான் அப்படி இல்லை. நான் முழுக்க நனைஞ்சவன். இனி எனக்கு முக்காடு எதுக்கு? அவ்வளவுதான், விடு'.
"கட்டித்தங்கம் வெட்டி எடுத்துக்
காதல் என்னும் சாறு பிழிந்துத்
தட்டித் தட்டி சிற்பிகள் செய்த உருவமடா, அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!"
என்று 1962-ல் நான் கதை வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் "தாயைக்காத்த தனயன்" படத்தில் கவிஞர் பாட்டமைத்தாரே, அதே போல, கையைத் தட்டித்தட்டித் தமிழைக் கூப்பிட்டுக் கூப்பிட்டு அவர் விரும்பிய வண்ணம் பாடிக்கொண்டார்.
ஆம், எனக்குத் தெரிந்து அவர் எழுதுகோல் ஏந்தி எழுதியதே இல்லை. பாடல் புனைவது அவருக்குக் கைவந்த கலை என்பதைவிட 'நாவந்த கலை' என்பேன் நான்!
புலவரும், போர் வீரரும் பயிற்சி அளிக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றனர். ஆனால் பிறவிக் கவிஞன் என்பவன், அவனுக்கு அவனாகவே உருவாகிக் கொள்கிறான்!
- நன்றி: தினத்தந்தி , ஆருர்தாஸ் பதிவிலிருந்து


