அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தார்.
ஏற்கனவே ஜோஹ்ரான் மம்தானி- டிரம்ப் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில் மேயர் தேர்தல் வெற்றிக்கு பிறகு பேசிய மம்தானி டிரம்ப்பை கடுமையாக விமர்சித்தார். அதே போல் மம்தானியின் வெற்றியை டிரம்ப் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் ஜோஹ்ரான் மம்தானிக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மம்தானி தனது வெற்றி உரையின்போது பேசியது மிகவும் கோபமான பேச்சு என்று நான் நினைக்கிறேன். அதில் நிச்சயமாக என் மீது கோபமாக இருந்தது. அவர் ஒரு மோசமான தொடக்கத்திற்கு சென்றுவிட்டார்.
அவர் என்னிடம் மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் அமெரிக்க அரசுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். மம்தானி ஒத்துழைக்கவில்லை என்றால் அவர் நிறைய இழக்க நேரிடும். நியூயார்க் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே நாங்கள் அவர்களுக்கு உதவுவோம்.
நியூயார்க்கில் கம்யூனிசத்தில் இருந்து தப்பி ஓடுபவர்களுக்கு விரைவில் புளோரிடா நகரம் அடைக்கலமாக இருக்கும்.
ஆயிரம் ஆண்டுகளாக, கம்யூனிசம் என்ற கருத்து வேலை செய்யவில்லை. இந்த முறை அது வேலை செய்யுமா என்று நான் சந்தேகிக்கிறேன். அது உண்மையில் ஒருபோதும் வேலை செய்யவில்லை.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
மம்தானியை கம்யூனிஸ்டு என்று விமர்சித்து வந்த டிரம்ப் அவர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் மோசமாகிவிடும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


