TamilsGuide

கல்மேகி புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 142 ஆக உயர்வு - தேசிய பேரிடராக அறிவித்த பிலிப்பைன்ஸ்

பசிபிக் பெருங்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. கல்மேகி என பெயரிடப்பட்ட இந்தப் புயல் பிலிப்பைன்ஸ் நகரை நோக்கி நகர்ந்தது.

அங்குள்ள பாலவான் தீவு அருகே இந்தப் புயல் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 220 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

கடலோர மாகாணங்களான நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு உள்ளிட்டவற்றில் தொடர் மழை கொட்டியது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக் காடாக மாறின.

இந்த புயல் தாக்குதலின்போது, கார்களும், ஆற்றங்கரையோர வீடுகளும் மற்றும் பெரிய அளவிலான கப்பல் கன்டெய்னர்களும் கூட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

இந்நிலையில், பிலிப்பைன்சை தாக்கிய கல்மேகி புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்தது. மேலும், மாயமான பலரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. புயலால் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி பெர்டினண்ட் மார்கோஸ் தேசிய பேரிடராக இதனை அறிவித்துள்ளார். இதனால், நிவாரண உதவிக்கான நிதியை அரசு ஒதுக்க முடியும். அதனுடன் அத்தியாவசிய பொருட்களுக்கான அடிப்படை விலை நிர்ணயமும் செய்ய முடியும். புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 5 லட்சம் பிலிப்பைன்ஸ் மக்கள் புலம் பெயர்ந்து சென்று விட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Leave a comment

Comment