அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் உகாண்டாவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானியும், குடியரசுக் கட்சியின் சார்பில் கர்டிஸ் ஸ்லிவாவும் போட்டியிட்டார்.
அமெரிக்காவில் முன்கூட்டியே ஓட்டளிக்கும் நடைமுறை இருக்கிறது. இதையடுத்து கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வந்தது.
ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே போல் மம்தானியை டிரம்ப்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், நியூயார்க் நகர மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால் அந்த நகரத்துக்ககு குறைந்தபட்ச நிதியைத் தவிர, மீதமுள்ள நிதியை நான் நிறுத்துவேன் என்ற டிரம்பின் மிரட்டலுக்கு மத்தியிலும், இந்திய வம்சாவளியை சேர்ந்த மம்தானி நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
நியூயார்க் நகரின் முதல் இஸ்லாமிய, இந்திய வம்சாவளி மேயராக தேர்வாகியுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மம்தானி, தனது வெற்றி உரையில் இந்திய முன்னாள் பிரதமர் நேருவின் வரலாற்று சிறப்புமிக்க உரையை மேற்கோள்காட்டி உரையாற்றினார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு நேரு பேசிய, "வரலாற்றில் அரிதாகவே வரும் ஒரு தருணம் வருகிறது. நாம் பழையதிலிருந்து புதியதற்கு அடியெடுத்து வைக்கும் போது, ஒரு யுகம் முடிவடையும் போது, நீண்ட காலமாக அடக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா வெளிப்படும் போது..." என்ற உரையை மேற்கோள் காட்டி மம்தானி பேசினார்.


