TamilsGuide

31 நாட்களாக முடங்கிக் கிடக்கும் அமெரிக்க அரசு - 7 பில்லியன் டாலர் இழப்பு

அரசாங்கத்தை தொடர்ந்து செயல்பட வைப்பதற்கான பல நிதி மசோதாக்களில் செனட்டில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் உடன்படாததால் அமெரிக்க அரசாங்கத்தின் பெரும் பகுதி கடந்த அக்டோபர் 1 முதல் மூடப்பட்டது.

அக்டோபர் மாத இறுதி வரை அரசாங்க நிதியுதவி மற்றும் ஆண்டு இறுதியில் காலாவதியாகவுள்ள மத்திய சுகாதார மானியங்களை நீட்டிப்பது உள்ளிட்ட ஜனநாயகக் கட்சியினரால் முன்மொழியப்பட்ட மசோதாவைத் தடுக்க குடியரசுக் கட்சியினர் வாக்களித்தனர். இதன் காரணமாக அரசு துறைகளில் பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த 31 நாட்களாக தீர்வு எட்டப்படாமல் பணி நிறுத்தம் தொடர்ந்து வருகிறது. இந்த பணிநிறுத்தத்தால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 7 பில்லியன் டாலர்களுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் இதை மதிப்பிட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 62,149 கோடிக்கும் அதிகமாகும்.

பணிநிறுத்தம் இப்படியே தொடர்ந்தால் மேலும் ஆறு வாரங்களில் 11 பில்லியன் டாலர்களையும் எட்டு வாரங்களில் 14 பில்லியன் டாலர்களையும் இழக்க நேரிடும் என பட்ஜெட் அலுவலகம் எச்சரித்துள்ளது.

1981 முதல் அமெரிக்க அரசாங்கத்தில் 15 முறை இதுபோன்ற பணிநிறுத்தம் ஏற்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த சமயம் 2018-19 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 35 நாட்கள் பணிநிறுத்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம்(CBO) என்பது அமெரிக்க காங்கிரஸ்(பாராளுமன்றத்துக்கு) பட்ஜெட் மற்றும் பொருளாதாரம் தொடர்பான மதிப்பீடுகளை வழங்கும் கட்சி சார்பற்ற சுயாதீனமான கூட்டாட்சி நிறுவனம் ஆகும்.

Leave a comment

Comment