நான் எம்.ஜி.ஆருடன் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும் ஒரு நடிகன் என்ற முறையில் 80-களில் அவருடன் பழகி இருக்கிறேன். புரட்சித் தலைவரின் மிகப்பெரிய ரசிகன்
“நான் சொந்த வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்தபோது அந்த வீட்டுக்கு புரட்சித் தலைவர் வந்து எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் தருவதற்காக ராமவரம் தோட்டத்துக்கு என் மனைவியுடன் சென்றிருந்தேன்.
அது ஒரு சனிக்கிழமை காலை. வரவேற்பறையில் காத்திருந்தோம். யார் யாரோ வருகிறார்கள், அவர்களெல்லாம் உள்ளே அழைக்கப்படுகிறார்கள். எனக்கு மட்டும் அழைப்பு வரவே இல்லை. கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஓடிவிட்டது.
“என்னங்க… இவ்வளவு நேரம் காக்க வைக்கிறாரு” என்று என் மனைவி கேட்க ஆரம்பித்துவிட்டார்.
“எவ்வளவு பெரிய மனிதரை பார்க்க வந்திருக்கோம். அவருக்காக சாயந்திரம் வரை கூட காத்திருக்கலாம்… இரு” என்று சொன்னேன்.
பத்தரை மணிக்கு மேல் உள்ளே அழைத்தார். அழைப்பிதழை கொடுத்ததும், கண்டிப்பா வர்றேன் என்றார்.
1987 ஜனவரி 16 என் வீட்டு கிரஹப்பிரவேசம். அன்றைக்கு காலையில் இயக்குநர் கே.சுப்பிரமணியனின் மனைவி எஸ்.டி.சுப்புலட்சுமி காலமாகி விட்டார். துக்க வீட்டுக்கு சென்றுவிட்டு நல்ல காரியத்துக்கு வரக்கூடாது என்பதால் காலையில் என் வீட்டுக்கு வந்துவிட்டார். பட்டு வேட்டி, பட்டு சட்டையில் வந்தவர், என்னைப் பார்த்ததும் “என்ன… இப்ப திருப்தியா?” என்று கேட்டார்.
அப்போது நான் அடைந்த சந்தோஷம் இருக்கே அதற்கு ஈடு இணையே இல்லை. மற்றவர்களை சந்தோஷப்படுத்தி அதைப் பார்த்து அவர் சந்தோஷமடைவார். அது தான் தலைவர்.
எங்கள் வீட்டு கிரஹப்பிரவேசத்தை முடித்துக்கொண்டு பிறகு தி.நகர் அலுவலகத்துக்கு சென்று பட்டு வேட்டி, பட்டு சட்டையை மாற்றிக் கொண்டு டைரக்டர் கே.சுப்பிரமணியன் வீட்டுக்கு துக்கம் அனுசரிக்கச் சென்றார்.
இந்தச் சம்பவம் நடந்து பல வருடங்கள் கழித்து ஒரு நாள் பிரமுகர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் சொன்னார், “உங்க வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு பத்திரிகை கொடுக்க வந்தபோது, தலைவர் உங்களை ரொம்ப நேரம் காக்க வச்சார் ஏன் தெரியுமா?”ன்னு கேட்டார்.
“தெரியலியேண்ணே என்றேன்.
“அப்ப நான் தலைவர்கூட அவர் அறையில் தான் இருந்தேன். நீங்கள் வந்தது சனிக்கிழமை. காலையில 8.30 மணிக்கு மேல வந்தீங்க. உங்களை உட்கார வச்சுட்டு மத்தவங்களை சந்திச்சுகிட்டு இருந்தாரு.
நான் கூட “அண்ணே… நடிகர் ராஜேஷ் வந்திருக்காரு”ன்னு சொன்னேன். “தெரியும்யா வெயிட் பண்ணட்டும். அவன் சொந்த வீடு கட்டி கிரஹப்பிரவேசத்துக்கு அழைக்க வந்திருக்கான். நல்ல விஷயம்.
அதனால 9 – 10.30 ராகுகாலம்
முடிஞ்சதும் உள்ளே கூப்பிடு” என்றார்.
அப்படின்னா அந்தத் தொழில் அதிபர் கொடுத்த கிரஹப்பிரவேச பத்திரிகையை மட்டும் வாங்கினீங்களே தலைவரே என்று கேட்டேன்.
அதற்கு அவர், “அவன் வாழ்ந்து முடிச்சவன்யா, ராஜேஷ் இப்ப தான் வாழ்க்கையைத் தொடங்குறான். அதனால தான் இந்த சென்டிமென்ட்” என்று தலைவர் சொன்னதை, பல வருடங்கள் கழித்து கேள்விப்பட்டபோது கண்கள் கலங்கிடுச்சு எனக்கு.
தன்னைச் சார்ந்தவர்களின் நலனில் எப்போதும் பெரும் அக்கறை கொண்ட மாமனிதராகவே வாழ்ந்தவர் எம் ஜி ஆர் அவர்கள்!
நடிகர் ராஜேஷ்!


