அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று 3 ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்குகிறார். அவர் 2-வது முறை அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று அமெரிக்காவிலிருந்து கிளம்பிய டிரம்ப் மலேசியா தலைநகர் கோலாலம்பூரை சென்றடைந்துள்ளார்.
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்கிறார்.
வாஷிங்டனில் இருந்து 23 மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு கோலாலம்பூரில் வந்திறங்கிய டிரம்ப்புக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான ஓடுபாதையில் மலேசியாவின் பாரம்பரிய உடைகள் அணிந்த நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து டிரம்ப் நடனமாடினார். மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமும் அதிபரும் இணைந்து நடனமாடினர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
மலேசிய பயணத்துக்கு பிறகு டிரம்ப் ஜப்பானுக்கு செல்கிறார். இந்த பயணத்தில் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதன்பின் டிரம்ப், தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இதில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
குறிப்பாக இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச உள்ளார். இந்த பயணத்தின்போது கடைசி நேரத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் -ஐ டிரம்ப் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


