TamilsGuide

கலையுலகத்திலும் அரசியல் உலகத்திலும் எம்.ஜி.ஆரின் நினைவுகள் வற்றாத நதி...

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இறந்து 38 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரை பற்றிய செய்திகள் காற்றில் உலவிக் கொண்டேயிருக்கும்.
கலையுலகத்திலும் அரசியல் உலகத்திலும் எம்.ஜி.ஆரின் நினைவுகள் வற்றாத நதியாக இன்னும் ஓடிக் கொண்டிருப்பதை போல மருத்துவ உலகத்திலும் அவரது மாண்பை பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் டாக்டர் மனோகரன்.
எம்.ஜி.ஆரை பற்றி உலகமே பேசிக் கொண்டிருக்க, அவர் பேசாத நாட்களில் அவருக்கு பேச்சு பயிற்சி சொல்லிக் கொடுத்தவர் இவர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பியதிலிருந்து புரட்சித்தலைவரின் இறுதி காலம் வரை அவரோடு இருந்தவர் இவர்.
நீங்கள் எப்படி எம்.ஜி.ஆருக்கு அறிமுகமானீர்கள்?
எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய பிறகும் கூட அவரால் சரியாக பேச முடியவில்லை. அவருக்கு பேச்சு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். அந்த நேரத்தில் அவருக்கு பயிற்சி அளித்தவர் மீது எம்.ஜி.ஆருக்கு நம்பிக்கையில்லை. அதற்கு நிறைய காரணம் இருந்தது. அதிருப்தியின் காரணமாக அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். வேறு ஒரு நல்ல மனிதர் தேவை. அதே நேரத்தில் அவர் அந்த துறையில் திறமையானவராக வும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்கள். அப்போதிருந்த ஹெல்ட் மினிஸ்டர், ஹெல்த் செகரட்டரி, டி.எம்.இ ஆகியோர், அரசு பொது மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த என்னை தேர்வு செய்தார்கள். எம்.ஜி.ஆருக்கு பேச்சு பயிற்சி அளிக்க வேண்டும் என்று என்னை அவர்கள் அழைத்தபோது நான் தயங்கினேன். ஏனென்றால், என் குடும்பம் பெரியது. நான் ஒருவன்தான் சம்பாதிப்பவன். காலையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு மாலையில் தனியாக கிளினிக் வைத்திருந்தேன். அந்த தொழில் பாதிக்குமே என்பதுதான் என் தயக்கம்.
இருந்தாலும் என்னை பற்றி தீர விசாரித்துதான இந்த முடிவுக்கு வந்தார்களாம். சரியான ஆள் நீதான். எனவே வேறு வழியில்லை என்று என்னை கொண்டுபோய் எம்.ஜி.ஆர் முன் நிறுத்திவிட்டார்கள். ஒருமுறை என்னை அளவெடுப்பது போல பார்த்தார். எவ்வளவு வேணும் என்று சைகையிலேயே கேட்டார். நான், ‘ஐயா…. நான் அரசு ஊழியன். அங்கு கொடுக்கிற சம்பளமே போதும்’ என்றேன். தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் நான் ராமவரம் தோட்டத்திற்கு போய்விட வேண்டும். இரவு பத்து மணிவரை அவரோடு இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய பணி. ராமாவரம் செல்ல வேண்டும் என்றால் நான் காலையில் நாலு மணிக்கே எழுந்து என்னை தயார் படுத்திக் கொண்டால்தான் ஆறு மணிக்காவது அங்கு போக முடியும். அதற்கப்புறம் எனக்கென ஒரு அரசு காரையும் டிரைவரையும் தனியாகவே தந்துவிட்டார்கள்.
ஆறு மணிக்கெல்லாம் அவரும் தயாராக இருப்பார். ஒன்பது மணி வரையிலும் அவருக்கு ஒவ்வொரு வார்த்தையாக சொல்லிக் கொடுப்பேன். நான் கொடுக்கிற பயிற்சியை அசுர வேகத்தில் பழகிக் கொண்டார். சில வார்த்தைகளை சொல்ல முடியாமல் கஷ்டப்படும் போது கூட அதற்காக அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டதில்லை. சிரமப்பட்டு பேசிவிடுவார். ஒன்பது மணிக்கு பிறகு அவர் காரிலேயே நானும் கோட்டைக்கு செல்வேன். முன் சீட்டில் நான் அமர்ந்து கொள்ள அவர் பின் சீட்டில் அமர்வார்.
கோட்டைக்கு சென்ற பின்பு அவரது அறையிலேயே எனக்கும் ஒரு சேர் போடப்பட்டிருக்கும். சற்று தள்ளி அவர் அருகிலேயே அமர்ந்திருப்பேன். அவர் பேசுவது புரியாவிட்டால் அவர் என்ன சொல்கிறார் என்பதை நான் நான் விளக்க வேண்டியிருந்தது. அதற்காகதான் எனக்கு அந்த இடம். அரசு இயந்திரம் எப்படி செயல்படுகிறது என்பதை அப்போதுதான் கண்கூடாக நான் கவனித்து பிரமித்தேன். இருந்தாலும் அந்த அறையை விட்டு வெளியே வந்தவுடனேயே அவற்றையெல்லாம் என் மனதிலிருந்து அழித்துவிடும் நல்ல பழக்கமும் எனக்கு இருந்தது.
நான் அவருடன் இருந்து சேவை செய்த அந்த சில வாரங்களில் என்னுடைய செயல்பாடுகள் பற்றியும், நான் எந்த விஷயத்தையும் வெளியில் பகிர்ந்து கொள்வதில்லை என்கிற தகவலும் அவருக்கு போயிருக்க வேண்டும். என்னை ஒரு மகன் போல பார்க்க ஆரம்பித்தார். சில விவாதங்களின் போது நான் சொல்கிற கருத்தை ஏற்றுக் கொள்கிற அளவுக்கு அவருடைய மனதில் எனக்கும் இடம் இருந்தது.
அப்படியா? ஒரு சம்பவம் சொல்ல முடியுமா?
ஒருமுறை எல்லாரும் தலைமை செயலகம் சென்று கொண்டிருந்தோம். காரில் அவருடன் வந்த அமைச்சர்களுடன் அவர் பேசிக் கொண்டே வந்தார். அப்போது மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்துக் கொண்டிருந்த நேரம். துத்துக்குடி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தனித் தனியாக்குவது தொடர்பாக பேச்சு வந்தது. ஒரு மாவட்டத்திற்கு வ.ஊ.சி யின் பெயர் வைப்பதாக முடிவெடுத்தார் எம்.ஜி.ஆர். மற்றொரு மாவட்டத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்கு முன் ஒரு சம்பவத்தை சொல்லி விடுகிறேன். அருப்புக்கோட்டை இடைத்தேர்தல் நேரத்தில் அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அந்த மாவட்டத்திற்கு கட்டபொம்மன் பெயரை வைப்பதாக கூறியிருந்தார்.

அது இப்போது என் நினைவுக்கு வந்தது. ‘ஐயா… ’ என்றேன் அவரை பார்த்து. ‘என்ன?’ என்றார். அந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதை அவருக்கு நினைவுபடுத்திவிட்டு, ‘நெல்லை கட்டபொம்மன் மாவட்டம் என்று பெயர் வைக்கலாமே’ என்றேன். பளிச்சென சிரித்தவர், ‘ஆமாம். இந்த யோசனை நல்லாயிருக்கு. அந்த பெயரையே வச்சுடலாம்’ என்றார். இப்படி என் வார்த்தைகளையும் அவர் ஏற்றுக் கொண்டது பெரிய விஷயம் இல்லை. ஏனென்றால் என் மீது அவர் பாசம் வைத்திருந்தார் என்று கூட சொல்வேன்.
ஒருமுறை கோவைக்கு சென்றிருந்தோம். கிட்டதட்ட மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். இங்கிருந்து விமானத்தில்தான் சென்றோம். எனக்கு அது முதல் விமான பயணம். சற்றே அச்சத்தோடு பிளைட்டில் ஏறினேன். பெரிய பெரிய அமைச்சர்கள் எல்லாரும் அந்த பிளைட்டில் இருக்க, என்னை அவர் அருகில் உட்கார வைத்துக் கொண்டார். சீட் பெல்டை அவரே மாட்டிவிட்டார். ஜுஸ் வந்தது. ஒரு கிளாசை அவரே தன் கையால் எடுத்து என்னிடம் கொடுத்து ‘குடிங்க’ என்றதை என்னால் இப்போதும் மறக்க முடியாது. நான் வயதில் சிறியவனாக இருந்தாலும் என்னையோ, எங்கள் மருத்துவ குழுவை சேர்ந்தவர்களையோ அவர் வா போ என்று ஒரு முறை கூட அழைத்ததேயில்லை. மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். பக்கத்தில்தான் அவர் பிறந்த ஊரான பாலக்காடும் இருந்தது. மூன்றாவது நாள் அங்கு கிளம்புகிற நேரம். எனக்கு திடீரென காய்ச்சல் வந்துவிட்டது. நான் எனது அறையிலேயே படுத்துவிட்டேன்.
அவருடன் நான் வராததை கவனித்த எம்.ஜி.ஆர், ‘மனோகரன் வரலயா?’ என்றாராம். அவர்கள் எனக்கு உடம்பு சரியில்லாத தகவலை சொல்லியிருக்கிறார்கள். பாலக்காட்டிலிருந்து திரும்பியதும் என்னை பார்க்க வந்துவிட்டார். நான் அவர் வருவது தெரியாமல் படுத்திருந்தேன். திடீரென்று யாரோ பக்கத்தில் நிற்கிற உணர்வு. திரும்பி பார்ப்பதற்குள் அவர் என் கன்னத்தில் கை வைத்து, ‘ஆமாம்.. ரொம்ப காய்ச்சலா இருக்கே’ என்று கூறியவர், ‘உடம்ப பார்த்துக்கங்க ’ என்று கூறிவிட்டு பக்கத்தில் அவருக்காக நியமிக்கப்பட்டிருந்த மருத்துவ குழுவிடம், ‘மனோகரனை கவனிச்சுக்கங்க’ என்று கூறிவிட்டு கிளம்பினார். எவ்வளவு பெரிய மனிதர் அவர்? நான் உருகிப் போனேன்.
அப்போது அவர் பொதுக்கூட்டங்களில் பேசி வந்தாரே?
ஆமாம்… அந்த பேச்சை நான்தான் தயார் செய்வேன். எந்தெந்த வார்த்தைகள் எளிமையாக அவரால் பேச முடியுமோ, அதை மட்டுமே உபயோகித்து பேச்சை தயார் செய்வது என் வேலையாக இருந்தது.
அமெரிக்காவிலிருந்து அவர் திரும்பி வந்த பின்பு எம்.ஜி.ஆர் கலந்து கொண்ட முதல் மீட்டிங் ஜேப்பியார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மீட்டிங்தான். என்னிடம், சார்…. தலைவரை எப்படியாவது என் கூட்டத்தில் பேச வச்சுடுங்க என்றார் அவர். நிச்சயமா அழகா பேசுவார் பாருங்க என்று கூறியிருந்தேன்.
அன்று காலையிலிருந்தே நான் எழுதி வைத்திருந்த அந்த பேச்சை அவர் பலமுறை பயிற்சி எடுத்துக் கொண்டார். மிக சிறப்பாக பேசியும் முடித்தார். அது மாதிரியே மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற விழாவிலும் நிறைவாக பேசினார். அந்த விழாவில்தான் நீண்ட சிந்தனைக்குப்பின் தன் கட்சி தொண்டர்களை தற்காப்புக்காக கத்தி வைத்துக் கொள்ள சொன்னார். அந்த உரையை நாங்கள் தயார் செய்யும் போது, அந்த விஷயத்தை அவர் சற்று அழுத்தமாகவே தனது உரையில் சேர்க்க சொன்னார்.
அந்த மாபெரும் விழாவில்தான் இப்போதைய முதல்வரம்மாவுக்கு செங்கோல் பரிசளித்து, தனது வாரிசு அவர்தான் என்பதையும் உணர்த்தினார் எம்.ஜி.ஆர்.
வேறு…சினிமா தொடர்பான விஷயங்கள் ஏதாவது?
சம்சாரம் அது மின்சாரம் படத்தின் 175 வது நாள் விழாவை எம்.ஜி.ஆர் தலைமையில்தான் நடத்த வேண்டும் என்று விரும்பினார்கள். அதுவரைக்கும் அந்த படத்தை அவர் பார்த்திருக்கவில்லை. அதற்காக ஒரு விஎச்எஸ் டேப்பையும் கொடுத்திருந்தார்கள். நானும் அவரும் ஒன்றாக அமர்ந்து படம் பார்ப்பதாகவும், அந்த விழாவில் பேச வேண்டிய ஸ்பீச்சை நான் தயார் செய்வதாகவும் பிளான். ‘இருங்க… படம் பார்த்துட்டு போகலாம்’ என்று கூறிவிட்டார் எம்.ஜி.ஆர். ஆனால் அரசு சம்பந்தமான வேலைகளின் காரணமாக அவரால் படம் பார்க்கவே முடியவில்லை. இப்படியே இரண்டு நாட்கள் போனது. ‘சரி… இதை எடுத்துட்டு போய் வீட்ல போட்டு பார்த்துட்டு எழுதிட்டு வாங்க’ என்று கூறிவிட்டார்.
நான் சற்றே தயங்கியபடி, ‘என் வீட்டில் கலர் டி.வி இல்லை. வி.சி.ஆர் இல்லை. நான் எப்படி பார்ப்பது?’ என்றேன். ஒரு நிமிஷம் யோசித்தவர் போய்விட்டார். அதற்கப்புறம் மறுநாள் நானும் அவரும் ஒன்றாக அமர்ந்து அந்த படத்தை பார்த்தோம். அந்த விழாவில் எம்.ஜி.ஆர் மிக பிரமாதமாக பேசினார். மறுநாள் பிற்பகல் இருக்கும். ‘எம்ஜிஆரின் உதவியாளர் என்னிடம் ‘உங்க வீட்ல இருந்து ஏதாவது போன் வந்துச்சா?’ என்றார். ‘இல்லையே’ என்றேன். ‘வந்திருக்கணுமே’ என்றார். எனக்கு எதுவும் புரியவில்லை. ‘எதுவா இருந்தாலும் சொல்லிடுங்களேன்’ என்றேன். இல்ல… தலைவர் உங்க வீட்ல சாலிடர் கலர் டி.வியும் வீசிஆரும் கொடுக்க சொல்லியிருக்கார். அதை அனுப்பிட்டோம் என்றார்.
நான் பதறிப்போனேன். ஏனென்றால் நான் எம்.ஜி.ஆருக்கு பேச்சு பயிற்சி அளிக்க கிளம்பிய நாளன்றே என் மனைவியிடம் சொன்ன ஒரு விஷயம், யார் எந்த கிஃப்ட் கொடுத்தாலும் வாங்கக் கூடாது என்பதுதான். அதுமட்டுமல்ல, கட்சிக்காரங்க யாராவது வந்தால் பேச்சு கொடுக்கவோ, கதவை திறந்து அவர்களை உட்கார சொல்கிற வேலையோ கூட இருக்கக் கூடாது என்பதுதான். இப்போது கொண்டு போகிற டி.வியை அவர்கள் வாங்கவே மாட்டார்களே? என் வீட்டிலும் போன் இல்லை. உடனே நான் பக்கத்து வீட்டுக்கு போன் செய்து, என் மனைவியை அங்கே வரவழைத்து விஷயத்தை சொன்னேன். அதற்கப்புறம்தான் அவரும் அதை வாங்கி உள்ளே வைத்தார்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்?
அதைப்பற்றி நான் அதிகம் சொல்லக்கூடாது. பட்… சில விஷயங்களை பகிர்ந்துக்கலாம். 87 ம் வருஷம் மீண்டும் நியூயார்க் போயிருந்தார் எம்.ஜி.ஆர். ஆபரேஷனுக்கு பிறகான மறு சோதனைக்கான ட்ரிப் அது. அவருடன் வழக்கம்போல நான், ஹெல்த் செகரட்ரின்னு ஒரு மருத்துவக் குழுவே கிளம்புனோம். கிட்டதட்ட ரெண்டு மாதங்கள் அங்கே அவருடன் இருந்தோம். பிரைவேட் செகரட்டரி பரமசிவம் ஐஎஎஸ், எம்.ஜி.ஆரின் உதவியாளர் மாணிக்கம் , செக்யூரிடி ஆபிசர் ஆறுமுகம் எல்லாரும் வந்திருந்தாங்க. அப்போ அங்கிருந்தபடியே இங்குள்ள அரசியல் மற்றும் சட்டம் ஒழுங்கையும் கவனிச்சார் எம்.ஜி.ஆர். இங்கு நடக்கும் எல்லா தகவல்களும் உடனுக்குடன் அங்கு வந்துவிடும். அப்போதான் இலங்கை தொடர்பான சில முடிவுகளை எம்.ஜி.ஆர் எடுத்திருந்தார். அதுமட்டும் அவர் நினைத்த மாதிரி அமைஞ்சிருந்தா பிரபாகரன் பற்றி நாம் இப்போ கேள்விப்படுகிற விஷயமும், தற்போது நடந்த துயர சம்பவங்களும் நடக்காமல் போயிருக்கும்.
என்ன செய்வது?
அதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க’ என்றபடி விடை கொடுக்கிறார் டாக்டர் மனோகரன். அவரை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் எங்கிருந்தாலும் தன்னை கவனித்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறாரோ என்னவோ?
வாழ்க!பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ்.

 

நன்றி – தி இந்து நாளிதழ்

Leave a comment

Comment