" தங்கள் தலைமையைத் திருப்திப்படுத்த சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் துடிப்பதுதான் இதற்குக் காரணம். இதனைப் புரிந்துகொண்டு கட்சித் தலைவர்கள் செயல்பட்டால் மட்டும்தான் அமைதி ஏற்படுத்த முடியும்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, ஓர் உறுப்பினர், 'கருணாநிதி, கருணாநிதி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தங்கள் தலைவரை இப்படி பெயர் சொல்லி அழைக்கலாமா என்று தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தார்கள். அப்போது ஆளும்கட்சி உறுப்பினர்களைக் கண்டித்தது முதல்வர் எம்.ஜி.ஆர்-தான். 'கலைஞர், எனக்குத் தலைவராக இருந்தவர். அவரை கருணாநிதி என்று மரியாதை இல்லாமல் அழைக்கக் கூடாது’ என்று எம்.ஜி.ஆர் கண்டித்தார்.
இன்னொரு சம்பவம், எம்.ஜி.ஆர் முதல்வராகவும் முனுஆதி சபாநாயகராகவும் இருந்தபோது நடந்தது. அப்போதைய தி.மு.க உறுப்பினர்களான துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய மூவரும் சபாநாயகர் எவ்வளவு சொன்ன பிறகும் அமைதியாக உட்காரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சபாநாயகர், 'உங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி எழுந்து, 'நான் ஆண்டவன்தான்’ என்று சொல்லி, அவர்கள் மூவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும் நடந்துகொண்டதைப்போல இன்றைய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நடந்துகொண்டால் மட்டும்தான் சபை அமைதியாக நடக்கும். "
- விகடன் .


