திருப்பூரில் வாழ்ந்து இளம் வயதில் சுதந்திரப் போரில் உயிர் நீத்த கொடி காத்த குமரனின் வரலாற்றை நாம் படித்திருப்போம். இந்த கொடி காத்த குமரனின் மனைவி ராமாயி மிகவும் வறுமையில் உழல்வதாகத் தகவல் கிடைத்ததும் முதலமைச்சாரா இருந்த எம்ஜி.ஆர் அவரை நேரில் சந்தித்தார்.
நாட்டுக்காக உழைத்த நல்லவரின் மனைவி பிறரிடம் உதவி பெறுவதை விரும்பமாட்டார் என்பதை நன்குணர்ந்த எம்.ஜி.ஆர் ராமாயியை அவர் வீட்டில் சந்தித்து அம்மா நான் உங்கள் மகன் எம்.ஜி.ராமச்சந்திரன் வந்திருக்கிறேன். என் தாய்க்கு நான் உதவ விரும்புகிறேன் என்றார். ராமாயியின் மனம் நெகிழ்ந்தது. மகன் தரும் உதவியை எந்தத் தாயாவது மறுப்பாரா? ஏற்றுக்கொண்டார்.
இந்த உறவை ராமாயி அம்மாள் இறுதிவரை பெருமையாக ஏற்றுக்கொண்டார். என் மகன் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்னையில் இருக்கிறார் என்று அந்தத்தாய் அன்போடு குறிப்பிடுவோர். எம்.ஜி.ஆர் அந்த ராமாயி அம்மாவை, ‘அம்மா” என்று அழைத்தது செய்தி அல்ல. ராமாயி அம்மா அவரை தனது மகன் என்று அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டதுதான் செய்தி.


