TamilsGuide

எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தை துவக்கியது ஏன்?- எழுத்தாளா் மாலன்

“எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது அவர் அரசியல் பேசவில்லை. தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசினார்.
“ஏன் இப்படி ஒல்லியா இருக்கீங்க? என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்டார்.
குண்டாக வேண்டும் என்றால் என்ன சாப்பிட வேண்டும் என்று அவர் ஒரு வழி சொன்னார். அதாவது பூரியும், குலோப் ஜாமூன்களும் வாங்க வேண்டும்.
குலோப் ஜாமூன் உருண்டைகளை முதலில் தின்றுவிட்டு, அந்த ஜீராவில் பூரியைப் பிய்த்துப் போட்டு ஊற வைத்துச் சாப்பிட வேண்டும் என்று அவர் கூறியது ஞாபகம் உள்ளது.
ஏன் சத்துணவுத் திட்டத்தை ஆரம்பித்தார் என்பதற்கு அவர் சொன்ன காரணங்கள் உருக்கமானவை. அவர் சிறுவனாக பாய்ஸ் கம்பெனியில் இருந்தபோது, குரல் உடையும் காலங்களில் வேஷம் தர மாட்டார்கள்.

அப்போது எம்.ஜி.ஆருக்குக் குரல் உடையும் காலம். வேஷம் இல்லை. அங்கே நடிப்பு, வசனம் சொல்லித்தர வாத்தியார்கள் உண்டு.
ஒரு வாத்தியாரின் மாணவர்களை இன்னொரு வாத்தியாருக்குப் பிடிக்காமல் போகும் அரசியல் உண்டு.
ஒரு நாள் சரியான பசி. பந்தி போட்டிருக்கிறார்கள். முதல் பந்தியில் பசி காரணமாக எம்.ஜி.ஆர் அமர்ந்து விட்டார்.
சாப்பாடு பரிமாறப்பட்டு உணவில் கை வைத்த நேரத்தில் எதிரணி வாத்தியார் வந்து கையைப் பிடித்து எழுப்பிவிட்டார்.
“உனக்குத் தான் வேஷமே இல்லையே! முதல் பந்தியில் சாப்பாடு கேட்குதோ? போ..போ..” என்று விரட்டி விட்டார்.
இவருக்குப் பசி. ஆனால் பசியை விட, அவ்வளவு பேருக்கு முன்னால் அவமானப்படுத்தப்பட்டது அவரை உறுத்திக் கொண்டே இருந்தது.
‘என்றாவது ஒரு நாள் எனக்கு வசதி வந்தால், அன்று நான் சாப்பாடு போடுகிறவனாக இருப்பேன்; ஒருக்காலும் சாப்பாட்டுப் பந்தியை விட்டு எழுப்பி விடுகிறவனாக இருக்க மாட்டேன்’ என்று எண்ணிக் கொண்டார்.
அப்போது அரசியலுக்கு வருவோம் என்றோ, முதல்வர் ஆவோம் என்றோ நினைத்தது கூட இல்லை.
சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டபோது, “எதற்குச் சாப்பாடு போடுகிறீர்கள்? அந்தப் பணத்தில் அரசாங்கம் தொழில்களைத் துவங்கலாமே?” என்று கேட்டேன்.
“தொடங்கி?”
“தொடங்கினால் பலருக்கு வேலை கொடுக்கலாம்”
“வேலை கொடுத்து?” என்று கேட்டார் அவர்.
“சம்பாதித்துக் கொள்வார்கள்”
“சம்பாதித்து என்ன செய்வார்கள்?”
“குடும்பத்துக்குச் சாப்பாடு போடுவார்கள்”
“அதைத் தான் நான் நேரடியாகச் செய்கிறேன்” என்றார் எம்.ஜி.ஆர் சிரிக்காமல்!”
எழுத்தாளர்: மாலன் 
 

 

Leave a comment

Comment