TamilsGuide

அமைதி ஒப்பந்தம் பேச்சுவார்த்தை - டிரம்ப் விருப்பத்தை நிராகரித்த ஈரான் சுப்ரீம் தலைவர் காமேனி

இஸ்ரேல்- காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முக்கிய காரணமாக இருந்தார். அவர் இஸ்ரேல்- காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான எகிப்து வந்தார்.

அதற்கு முன்னதாக இஸ்ரேல் நாட்டிற்கு சென்று, அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது "ஈரானுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த முடிந்தால், அது நன்றாக இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஈரானின் சுப்ரீம் தலைவர் அயோதுல்லா அலி காமேனி, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் விருப்பத்தை நிராகரித்துள்ளார். மேலும் ஈரானில் உள்ள அணு ஆயுத திறனை அமெரிக்கா அழிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான்- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் அணு ஆயுதத் திட்டம் குறித்த மறைமுக பேச்சுவார்த்தை ஐந்து சுற்றுகளாக நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதுஇ அந்த 12 நாள் விமானத் தாக்குதலால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில்தான் அமெரிக்கா அதிபர் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதை காமேனி நிராகரித்துள்ளார்.

"டொனால்டு டிரம்ப் தன்னை ஒரு டீல் மேக்கர் என சொல்கிறார். ஆனால் ஒரு ஒப்பந்தம் வற்புறுத்தலுடன் சேர்ந்து அதன் விளைவு முன்னரே தீர்மானிக்கப்பட்டால், அது ஒரு ஒப்பந்தம் அல்ல, மாறாக ஒரு திணிப்பு மற்றும் மிரட்டல். ஈரான் மீது குண்டுகள் வீசி அணு ஆயுத தொழிற்சாலையை அழித்ததாக பெருமை கொள்கிறார். நன்று. அவர் கனவு காணட்டும்" காமேனி எனத் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment