பேரழிவை ஏற்படுத்திய காஸா போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. உலகம் முழுவதும் வாழும் போரை வெறுக்கும், சமாதானத்தை விரும்பும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இது உள்ளது. மிக முக்கியமாக, காஸா பிராந்தியத்தில் வாழும் பலஸ்தீன மக்களுக்கு நிம்மதியான ஒரு சூழல் உறுதி செய்யப்பட்டுள்ளது. போரின் அழிவுகளிலிருந்து மீண்டு அந்த மக்கள் சகஜமான ஒரு வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பக் கூடிய ஒரு சூழல் அமையுமா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது. காஸா பிராந்தியத்தின் எதிர்காலம் என்னவாக அமையும் என்பது எதிர்வரும் காலங்களிலேயே தெரியவரும்.
இரண்டு வருடங்களாக நீடித்த போரை இஸ்ரேல் அரசாங்கம் கையாண்ட விதமும், ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கமும், டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகமும் செயற்பட்ட விதமும் கண்டனங்களுக்கு உரியவையே. எனினும், தற்போது ட்ரம்ப் நிர்வாகம் எடுத்த முன்முயற்சியினால் போர் ஓய்வுக்கு வந்திருக்கிறது.
போர் நிரந்தரமாக முடிவுக்கு வந்திருக்கிறதா என்ற கேள்விக்கு காலமே பதில் சொல்லும். இந்த ஆண்டு ஜனவரி 20 முதல் ஆட்சி பீடத்தில் இருந்துவரும் ட்ரம்பால் தற்போது போரை முடிவுக்குக் கொண்டுவர முடியுமாக இருந்தால், இதனை ஏன் அவரால் முன்கூட்டியே செய்ய முடிந்திருக்கவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பானதே. ‘தன்னுடைய இலக்குகள் யாவும் நிறைவேறும் வரைக்கும்’ இஸ்ரேலினால் போரை நடத்த முடிந்திருக்கின்றது. என்றால், அதற்கான கால அவகாசத்தை ட்ரம்ப் நிர்வாகம் வழங்கியிருக்கின்றது என்பதே அர்த்தம்.
உலகின் பெரும்பாலான மக்களின் விருப்புக்கு மாறாக, அனைத்துக் கண்டனங்களையும், வேண்டுகோள்களையும் புறந்தள்ளியே இந்தப் போரை இஸ்ரேல் நடத்தியிருந்தது. உலக நாடுகள், மனித உரிமை நிறுவனங்கள், உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான பொதுமக்கள் ஆகியோரின் குரலை இஸ்ரேல் கணக்கிலேயே கொள்ளவில்லை. பலஸ்தீனத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் பற்றியோ தனது படையினரின் உயிர் பற்றியோ , பேரழிவுக்கு உள்ளான கட்டுமானங்கள் பற்றியோ இஸ்ரேல் கவனத்தில் கொண்டிருக்கவில்லை. காஸா பிராந்தியத்தில் பட்டினியாலும், மருத்துவ வசதி இன்மையாலும் மாண்டுபோன குழந்தைகளின் அவலம் கூட இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் மனசாட்சிக்குக் குறுக்கே வந்திருக்கவில்லை.
இஸ்ரேலின் ஒரே இலக்கு பலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸின் பிடியை இல்லாமல் செய்வது. முடிந்தால் தனக்கு விசுவாசமான ஆட்சியாளர்களை குறைந்தளவு அதிகாரங்களுடன் பதவியில் அமர்த்துவது. முடியுமானவரை காஸா பிராந்தியத்தில் உள்ள பலஸ்தீனியர்களை வேறு இடங்களுக்கு இடம்பெயரச் செய்வது. இவை நீண்டகாலமாக இஸ்ரேல் ஆட்சியாளர்களின் மனதில் உள்ள திட்டங்கள். ஆட்சியாளர்கள் மாறி மாறி வந்தாலும் இலக்கு ஒன்றே.
ட்ரம்ப் அவர்களால் முன்மொழியப்பட்டு எகிப்து, கட்டார், துருக்கி ஆகிய நாடுகளுடன் இணைந்து 13ஆம் திகதி திங்கட்கிழமை எகிப்து நாட்டிலே போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டது. போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இரண்டு தரப்பினரும் இந்த உடன்படிக்கை தொடர்பான எந்தவொரு நிகழ்விலும் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை. ஹமாஸ் அமைப்பை எகிப்து, கட்டார், துருக்கி ஆகிய நாடுகள் பிரதிநிதித்துவம் செய்திருந்ததைப் பார்க்க முடிகிறது. இஸ்ரேல் நாட்டினை அமெரிக்கா பிரதிநிதித்துவம் செய்தது. இதனை வேறுவிதமாகச் சொல்வதானால் அமெரிக்காவின் சொல் கேட்டே இஸ்ரேல் ஆடுகிறது எனலாம்.
உடன்படிக்கையின் பிரகாரம் உயிரோடிருந்த 20 கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. பதிலுக்கு 2000 வரையான பலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. கைது செய்யப்பட்ட பலஸ்தீனியர்கள் அனைவரும் காஸா பிராந்தியத்திலே கைது செய்யப்பட்டிருந்தாலும் விடுதலையான சிலர் காஸா திரும்ப அனுமதிக்கப்படாமல் நாடுகடத்தப்பட்டு உள்ளனர். அதேவேளை காஸா பிராந்தியத்தின் பல பகுதிகளில் இருந்து இஸ்ரேலியப் படையினர் வெளியேறிய இடங்களை நோக்கி ஹமாஸ் தீவிரவாதிகளும், பொது மக்களும் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இந்தப் பிரதேசங்களில் ஹமாஸ் உறுப்பினர்களுக்கும், போட்டிக் குழுக்களுக்கும் இடையே மோதல்கள் நடப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உடன்படிக்கையின் பின்னான காலகட்டத்தில் இருபெரும் சவால்கள் உள்ளன. முதலாவது காஸாவில் உள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்குவது. அடுத்து போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வது. புனரமைப்புப் பணிகளுக்குத் தேவைப்படும் பெருமளவு நிதியை எங்கிருந்து பெறுவது என்பது அடுத்த கேள்வி.
தற்போது போர் நடைபெற்றுவரும் உக்ரைனில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள, முடக்கப்பட்டுள்ள ரஸ்ய நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை. ஆனால் காஸா போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் காஸாவின் புனரைமைப்புக்கான நிதியை இஸ்ரேல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து இதுவரை எழவில்லை என்பதைப் பார்க்க முடிகிறது.
உள்நாட்டுப் போர் நிகழும் பிரதேசங்களில் போர் நிறுத்த உடன்படிக்கை மூலம் போர் முடிவுக்கு வந்துவிட்டாலும் மோதல்கள் முடிவடைய குறிப்பிட்ட காலம் எடுக்கும் என்பதே யதாரத்தம். காஸாவில் அதற்கான அறிகுறிகள் ஏற்கெனவே தென்படத் தொடங்கிவிட்டன. இஸ்ரேலியப் படைகள் குறிப்பிட்டளவு தூரம் பின்வாங்கி இருந்தாலும் படை நடவடிக்கைகள் வேறு வழிகள் மூலம் தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகின்றது. நேரடியாக இல்லாதுவிட்டாலும் மறைமுகமாகவேனும் இஸ்ரேல் தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயலக் கூடும்.
பலஸ்தீன மக்களைப் பொறுத்தவரை அவர்கள் சதுரங்கத்தில் நகர்த்தப்படும் பகடைக்காய்கள் போன்றே பயன்படுத்தப்படுவதைப் பார்க்க முடிகின்றது. கடந்த இரண்டு வருடங்களில் 67,000 வரையான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 170,000 வரையானோர் காயங்களுக்கு இலக்காகி உள்ளனர். இவர்களுள் பெண்கள், குழந்தைகள், தொண்டு நிறுவனப் பணியாளர்கள், ஊடகர்கள் உள்ளிட்ட அனைவரும் அடங்குவர்.
இவர்கள் தவிர கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த ஹமாஸ் தீவிரவாதிகளின் எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
சமாதானம் என்பது வெறுமனே ஒப்பந்தங்கள் மூலமாக அன்றி மனப்பூர்வமாக எட்டப்பட வேண்டும். ஆனால் காஸா விடயத்தில் மனப்பூர்வமான சமாதானம் எட்டப்பட்டுள்ளதா என்பதில் சந்தேகம் இருக்கவே செய்கின்றது. பல பத்தாண்டுகளாக நீடிக்கும் பலஸ்தீன மக்களின் துயருக்கு இந்த ஆண்டிலாவது ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படுமானால் அது பலஸ்தீன மக்களுக்கு மாத்திரமன்றி உலக மக்கள் அனைவருக்குமே நன்மை பயக்கும் என்பது நிச்சயம்.
சுவிசிலிருந்து சண் தவராஜா


