சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக போட்டியாளர்கள் பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும் லக்சரியில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார். பொம்மை பொம்மை போட்டியில் பிக்பாஸ் வீட்டை சேர்ந்த கம்ருதீன் வெற்றிப்பெற்று எவிக்ஷன் ஃபிரீ பாஸ் பெற்றார். இதனால் இந்த வார எவிக்ஷன் பட்டியலில் இருந்த கம்ருதீன் விடுவிக்கப்பட்டார். எனவே மீதம் இருந்த வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், வி.ஜே பாரு, சபரிநாதன், கெமி, ரம்யா ஜோ , எப்.ஜே , அரோரா சின்க்ளேர், அப்சரா சிஜே, ஆகிய போட்டியாளர்கள் எவிக்ஷனில் இருக்கின்றனர்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி 13 நாட்களை கடந்த நிலையில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் அப்சரா சிஜே என்று தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கையான அப்சரா சிஜே , மாற்று பாலினத்தவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். 'கடந்து வந்த பாதை' டாஸ்கில் தான் எதிர்கொண்ட கஷ்டங்கள், சவால்களை அவர் பகிர்ந்துக்கொண்டது போட்டியாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் நமீதா மாரிமுத்து, ஷிவின் ஆகிய திருநங்கை போட்டியாளர்கள் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட நிலையில், இந்த முறை திருநங்கை போட்டியாளராக அப்சரா சிஜே பங்கேற்றார்.


