1964ல் பிரதமர் நேரு மறைந்த போது கவியரசர் கண்ணதாசன் “சீறிய நெற்றி எங்கே” என்ற வரிகள் ஆரம்பிக்க நேருவுக்கு இரங்கல் பாடலை எழுத அதை சீர்காழி கோவிந்தராஜன் சீரணி அரங்கில் பாடினார். இந்த செய்தி அன்றைய தினத்தந்தி பேப்பரில் செய்தியுடன் முழுப் பாடலும் வெளியானது. அன்றைய மறு நாள் வேதாரண்யத்தில் ஒரு நிகழ்வு பாவலர் தலைமையில் நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வை நேருவின் இரங்கல் கூட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இசைஞானிஅந்த நிகழ்வில் கவியரசர் நேருவுக்காக எழுதிய பாடலை கம்போஸ் செய்து மேடையில் அவரே பாடி சிறப்பித்தார்.
இசைஞானி சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே கவியரசரின் பாடலை மேடையில் இசை அமைத்து பாடியதோடு அல்லாமல் கவியரசரின் கடைசி பாடலையும் இசைஞானியே இசை அமைத்தது கூடுதல் விசேசம் என்று சொல்லலாம். இசைஞானியின் இசையில் கடைசியாக கவியரசர் கண்ணதாசன் எழுதிய கூந்தலிலே மேகம், ராஜா ராணி ஜாக்கி, கண்ணே கலைமானே என மூன்று பாடல்களையும் 1 மணி நேரத்தில் எழுதி கொடுத்தார்.
கவியரசருக்கும் மெல்லிசை மன்னருக்குமான நட்பு என்பது அண்ணன் தம்பி உறவாகவே பார்க்க முடிகிறது. எம்.ஜி.ஆர் படத்திற்காக பாடல் கேட்டு அதை பற்றி விவாதிக்க மெல்லிசை மன்னர் வீட்டுக்கு கவியரசர் சென்ற போது அவர் தூங்கிக்கொண்டிருப்பதை கேள்வி பட்டு கோபத்தில் “அவனுக்கென்ன தூங்கி விட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா” என்ற வரிகளை பாடலுக்கு பல்லவியாக அமைத்த நிகழ்வாகட்டும். மெல்லிசை மன்னருக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்த சூழலில் அந்த நாட்கள் முழுக்க காலை 8 மணிக்கு வந்துட்டு இரவு 10 மணிக்கு தான் செல்வாராம்.
கவியரசர் மெல்லிசை மன்னர் இருவருக்குமான உறவானது ஒரு அண்ணன் தம்பியாக இருந்தது. ஒரு பேட்டியில் மெல்லிசை மன்னர் "கண்ணதாசன் எங்க போனாலும் என்னை கூட்டிட்டு தான் போவார். ரஷ்யாவுக்கு செல்லும் போது கூட கூடவே என்னையும் கூட்டீட்டு போவார். ரெண்டு நாள் பார்க்கலைன்னா கூட மூனாவது நாள் போன் பண்ணி 'எங்க போயிட்ட ஏன் பார்க்கலை'னு சத்தம் போடுவார்... இப்படி எங்க போனாலும் கூட்டீட்டு போற நட்பு... அவர் மேலே போயிட்டாரு, என்னை மட்டும் விட்டுட்டு போயிட்டாரு” ஒரு பேட்டியில் மெல்லிசை மன்னர் சொல்லி முடிக்கும் போது அவர் முகத்தில் அந்த வேதனையை உணர முடியும்.
உனக்கே உயிரானேன்...
எந்நாளும் எனை நீ மறவாதே...
நீ இல்லாமல் எது நிம்மதி...
நீதான் என்றும் என் சன்னிதி…
கவியரசரின் நினைவு நாளில் அன்னாரது புகழை போற்றி வணங்குவோம்...
Kannan Natarajan


