இருபெரும் இமயங்களான சிவாஜியும் எம்.ஜி.ஆரும் ஒருவர் பின் ஒருவராக நடந்து வரும் இந்தப் புகைப்படம், அரிதினும் அரிது .இது பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் மறைந்த நடிகர் எம்.என்.கிருஷ்ணனின் மகனும் நடிகர் சங்கப் பொது மேலாளருமான நடேசன்.
நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆரை, அப்போதைய நடிகர் சங்கத் தலைவரான சிவாஜி அழைத்து வரும் காட்சிதான் இது. பின்னால் வரும் நாகேஷ், அப்போது செயற்குழு உறுப்பினராக இருந்தார். அடிக்கல் நாட்டும்போது நடிகராக இருந்த எம்.ஜி.ஆர், பத்து வருடங்கள் கழித்து நடந்த திறப்பு விழாவின்போது முதல்வராகி விழாவில் கலந்துகொண்டார்.
திறப்பு விழா அன்று ‘சாம்ராட் அசோகன்’ என்ற சிவாஜியின் நாடகம் நடந்தது. போர்க்களத் தில் அசோகரின் மனசாட்சி பேசுவது போன்ற காட்சியில் வேறு எந்த கேரக்டர்களும் இல்லாமல் சிவாஜி மட்டும் தனியாக 20 நிமிடங்கள் நடித்தார். அசரீரி குரலுக்காக மனோரமா வாய்ஸ் கொடுத்தார். மேடைக்கு கீழே அமர்ந்தபடி நாடகம் பார்த்த எம்.ஜி.ஆர், சிவாஜியின் பாவனைகளில் நெகிழ்ந்து போய், ‘அற்புதமான நடிப்பு’ எனப் பாராட்டினார். இப்படிப்பட்ட பெருந்தன்மையில் எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர்தான். அதற்கு இன்னொரு சம்பவமும் சொல்கிறேன்...
1980ல் வேலூரில் அரசு விழா ஒன்றில் நடந்த நாடகத்தில் என் தந்தையார் நடித்துக் கொண்டிருந்தபோது மேடையிலிருந்து தவறி விழுந்து அங்கேயே உயிரிழந்தார். தந்தையின் இழப்பால் கவலையில் தோய்ந்திருந்த நேரத்தில், எம்.ஜி.ஆரை சந்திக்க நேர்ந்தது. என்னை அருகில் அழைத்த எம்.ஜி.ஆர், ‘நான் உங்க அப்பாவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நாங்கள் மும்பையில் ஒரு நாடகம் நடத்த புறப்பட்டுக்கொண்டிருந்தோம். அப்போது அதில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்க வேண்டிய நடிகர் திடீரென்று வர முடியாத சூழ்நிலை. என்ன செய்வதென்று புரியாமல் உன் அப்பாவை அழைத்தோம். அப்போது அவர் சிவாஜி நாடகக் குழுவில் நடித்துக் கொண்டிருந்தார். இருந்தாலும் சிவாஜியிடம் அனுமதி பெற்று என் நாடகத்தில் நடித்துக் கொடுத்தார். அந்த உதவியை மறக்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு அரசு மருத்துவமனையில் எனக்கு லேப் டெக்னீஷியன் பணியை நேரடி நியமனமாக வழங்கினார்.’’
- அமலன்!


