TamilsGuide

உதவி செய்யுங்கள் தயவு செய்து உபத்திரம் செய்யாதீர்கள்- இராமலிங்கம் சந்திரசேகர்

நாடாளுமன்ற உறுப்பினரான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே, கேடு கெட்ட அரசியலை அவர்கள் நிறுத்தாவிட்டால் முகத்திரைகளை கிழித்தெறிய வேண்டிய நிலை ஏற்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கொழும்பில் அமைச்சில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மீரியபெத்த மண்சரிவு ஏற்பட்டு எத்தனை வருடங்கள்? இவ்வளவு நாளும் எங்கிருந்தீர்கள் என ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாரம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் கேட்கின்றேன்.

இவ்வளவு நாளும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தீர்களா? அவர்களுக்கான வீடுகள் தற்போதுதான் கட்டப்பட்டு கையளிக்கப்படக்கூடிய சூழ்நிலை வந்துள்ளது.

வெத்து காகிதம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.

வழங்கப்பட்டது காகிதமாக இருந்தாலும் உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியும். எனவே, கேடு கெட்ட அரசியலை நிறுத்துங்கள். எமது மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுக்காமல், அவர்களை அடிமை வாழ்வு வாழ வைத்ததால்தான் கடந்த தேர்தலில் மக்கள் பதிலடி கொடுத்தார்கள்.

கொழும்பில் இருந்த மக்களும் மனோவின் நாடக நடிப்பு அரசியலை நிராகரித்து, அவரை ஒதுக்கி வைத்துள்ளனர்.

மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்குரிய ஆதரவு அதிகரித்துவருவதால்தான் இவர்கள் கத்துவதற்கு ஆரம்பித்துள்ளனர்.

தம்பி ஜீவன் அரசியலை நல்ல முறையில் கத்துக்கொள்ளுங்கள். கூவித்திரிவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. கடந்த காலங்களில் நீங்கள் எத்தனை வீடுகளை கட்டினீர்கள்? கட்டிய சில வீடகள்கூட எந்த நிலையில் உள்ளது? எனவே, முடியுமாக இருந்தால் உதவி செய்யுங்கள், தயவு செய்து உபத்திரம் செய்யாதீர்கள் என திகா, மனோ, ராதா, ஜீவனிடம் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் நாங்கள் கதைக்கபோனால் உங்களின் முகத்திரைகளை கிழிக்க நேரிடும் எனவும் கூறியுள்ளார்.
 

Leave a comment

Comment