நாளுக்கு நாள் புதிய சாதனைகளை முறியடித்துச் செல்லும் தங்கத்தின் விலையானது வெள்ளிக்கிழமை (17) மற்றொரு முக்கியமான வரம்பைத் தாண்டியது.
அமெரிக்கா-சீனா வர்த்தக உறவுகள் குறித்த கவலைகள் அதிகரித்து வருவதும் தங்கத்தின் விலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
அத்துடன், முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கம் வாங்கும் ஆர்வம் அதிகரிப்பதற்கு, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு அதிக வட்டி விகிதக் குறைப்பை மேற்கொள்ளக்கூடும் என்ற வதந்திகளும் காரணம் என்றும் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை தங்கக் கட்டியின் விலை 1.2 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,379.93 ஆக உயர்ந்து, 30 டிரில்லியன் டொலர் சந்தை மூலதனத்தை எட்டியது.
இது 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதன் அதிகபட்ச வாராந்திர இலாபத்தைப் பதிவு செய்யும் சந்தர்ப்பமாகும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கத்தின் விலை 165.61 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஸ்பெக்டேட்டர் இன்டெக்ஸின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2022 ஆம் ஆண்டில், தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $1,649 ஐத் தாண்டியது.
இன்று தங்கத்தின் விலைகள் இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட $4,380 ஐத் தொட்டுள்ளன.
இது குறித்த மூன்று ஆண்டுகள் காலக்கட்டத்தின் இரு மடங்கிற்கும் அதிகமான அதிகரிப்பாகும்.
இந்த ஆண்டு தங்கத்தின் விலை 65 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.
புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக பதட்டங்கள், அதிகரித்து வரும் நிதி மற்றும் கடன் அளவுகள் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் மத்தியில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, வெள்ளியின் விலையும் இந்த வாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
அதன்படி, அதன் விலை வெள்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ் $54.3775 ஆக புதிய உச்சத்தை எட்டியது.
இலங்கை விலை விபரம்!
கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 410,000 ரூபாவாக காணப்படுகிறது.
அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 379,200 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


