TamilsGuide

கனடாவின் மூன்று விமான நிலையங்கள் மீது சைபர் தாக்குதல்

கனடாவின் மூன்று வெவ்வேறு விமான நிலையங்களின் மீது சபைர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் இரண்டு விமான நிலையங்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹேக்கர்கள் பொது தகவல் முறைமைகளில் ஊடுருவியதையடுத்து பல விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

ஹேக்கர்கள் கெலோவ்னா சர்வதேச விமான நிலையத்தின் (Kelowna International Airport) டெர்மினல் தகவல் திரைகள் மற்றும் பொது ஒலிபரப்பு அமைப்பில் ஊடுறுவியுள்ளனர்.

இதனால் சில விமானங்கள் தற்காலிகமாக தாமதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திரைகளில் “இஸ்ரேல் போரில் தோல்வியடைந்தது, ஹமாஸ் வென்றது” என்ற ஹமாஸ் ஆதரவு செய்தி காட்சியளிக்கப்பட்டது.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறித்து “பன்றி” என அவமதிப்பான வார்த்தைகள் காட்டப்பட்டன.

அதே நேரத்தில், ஹேக்கர்கள் விமான நிலையத்தின் ஒலிபரப்பு முறைமையையும் கைப்பற்றி, வெளிப்புற ஆடியோ செய்திகள் ஒலிபரப்பியதாக கூறப்படுகிறது.

“எங்களிடம் சைபர் பாதுகாப்பு நடவடிக்கைத் திட்டம் உள்ளது. அதனை நேற்று மாலை உடனடியாக செயல்படுத்தினோம். குறுக்கீடு செய்யப்பட்ட செய்திகள் மிக வேகமாக துண்டிக்கப்பட்டன.

தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக விமான நிலைய தலைமைச் செயல் அதிகாரி சாம் சமதார் தெரிவித்துள்ளார்.

விமான நிலையப் பணியாளர்கள் கைப்பிடி மேகஃபோன்கள் (megaphones) மூலம் பயணிகளுடன் தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு விமானங்கள் பாதிக்கப்பட்டன — ஒன்று நான்கு மணி நேரம் புறப்பாடு தாமதம், மற்றொன்று இரண்டு மணி நேரம் வருகை தாமதம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று, விக்டோரியா சர்வதேச விமான நிலையம் மற்றும் வின்ட்சர் சர்வதேச விமான நிலையம் (ஒன்டாரியோ) ஆகியவற்றிலும் இதேபோன்ற சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஹாரிஸ்பர்க் சர்வதேச விமான நிலையத்திலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகூ மற்றும் டொனால்ட் ட்ரம்ப் குறித்து அவமதிப்பான ஆடியோ ஒளிபரப்பு நிகழ்ந்துள்ளது. 
 

Leave a comment

Comment