இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர், அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்தம் காரணமாக முடிவுக்கு வந்தது.
இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் இருந்த இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவித்தனர். இதற்கு ஈடாக பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது.
இதற்கிடையே எகிப்தின் ஷர்ம் அல்‑ஷேக் நகரில் நடந்த காசா அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசும்போது கூறியதாவது:-
இந்தியா சிறப்பான நாடு. அங்கு எனது மிகச்சிறந்த நண்பர் (மோடி) தலைமை பொறுப்பில் இருக்கிறார். அவர் மிக சிறப்பான பணிகளை செய்து வருகிறார். இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக மிகவும் நன்றாக வாழப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
அப்போது தனக்கு பின்னால் நின்று கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து அப்படிதானே என்று டிரம்ப் சிரித்தபடி கேட்டார். தொடர்ந்து பேசிய டிரம்ப், என்னை பொறுத்தவரை மோடி மற்றும் ஷெபாஸ் ஷெரீப் சிறந்த தலைவர்கள் என்றார். மேலும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனிரையும் டிரம்ப் பாராட்டினார்.


