"மதுரை வீரன்'' படத்தில் அப்பா எழுதின "வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க'' பாடல், அவருக்கு ரொம்பவும் புகழைத் தேடித்தந்தது.
ஏற்கனவே நாடகத்துக்கு கதை எழுதியிருந்ததால், சினிமாவிலும் கதை முடிவாகும்போது அப்பாவிடம் கலந்து பேசுவார்கள். அப்பாவிடம் பாடல் எழுதும் திறமை மட்டுமின்றி, கதை ஞானமும் இருப்பதை தெரிந்து கொண்ட டைரக்டர் ராமண்ணா, "எம்.ஜி.ஆருக்காக ஒரு கதை தரமுடியுமா?'' என்று கேட்டார்.
அப்பாவும் அப்போதே ஒரு கதை சொன்னார். அந்தக்கதை பிடித்துப்போக ராமண்ணா அதை எம்.ஜி.ஆரிடம் சொல்ல அவரும் இதையே படமாக்குவோம் என்றார். இப்படி எம்.ஜி.ஆரையும் கவர்ந்த அந்தக்கதைதான் `குலேபகாவலி' என்ற பெயரில் வெளிவந்தது.
இந்தப் படத்துக்கு அப்பா முதலில் எழுதிய பாடல், "சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு.'' இந்தப்பாடல் எம்.ஜி.ஆருக்கு ரொம்பப் பிடித்து, இதற்கு சிறப்பாக நடனக்காட்சி அமைக்க வேண்டும் என்று ராமண்ணாவிடம் சொல்லியிருக்கிறார்.
இதே படத்துக்கு அப்பா எழுதி காலத்துக்கும் மறக்க முடியாத காதல் பாடலாகிவிட்ட பாடல், "மயக்கும் மாலைப்பொழுதே நீ போபோ'' பாடல். அப்பாவின் பாட்டெழுதும் வேகம் பார்த்த எம்.ஜி.ஆர். அப்பாவை "எக்ஸ்பிரஸ் கவிஞர்'' என்று பெருமையுடன் அழைப்பாராம்.
இப்படி அப்பாவின் பாடல்களால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆருடனேயே ஒரு கட்டத்தில் அப்பா மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.''
கொள்கை விஷயத்தில் அப்பா நெஞ்சுறுதி மிக்கவர். எதற்காகவும், யாருக்காகவும் வளைந்து போகாதவர். `லலிதாங்கி' என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்த அப்பா, எம்.ஜி.ஆரை கதாநாயகனாக போட்டார். பானுமதியையும் ஒப்பந்தம் செய்தார். படம் 10 ஆயிரம் அடிவரை வளர்ந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் அப்பாவுக்கும் இடையே ஒரு பிரச்சினை எழுந்தது.
கதைப்படி எம்.ஜி.ஆருக்கு பக்தியுடன் கூடிய இளைஞர் வேடம். எனவே படத்தின் ஒரு பாடல் காட்சியில் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து வரவேண்டும்.
இந்த காட்சிக்காக ஒரு பாடலையும் அப்பா எழுதினார்:
"ஆண்டவனே இல்லையே
தில்லை தாண்டவனே உன்போல்
ஆண்டவனே இல்லையே''- இதுதான் பாட்டு.
இந்த பாடல், அப்போது தி.மு.க.வில் இருந்த எம்.ஜி.ஆருக்கு உடன்பாடாக இல்லை. தான் சார்ந்த கட்சியின் `கடவுள் மறுப்புக் கொள்கை'க்கு முரணானது என்று கருதினார். அதனால் இந்தப் பாடல் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
அப்போதே எம்.ஜி.ஆர். பட உலகில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். எனவே, "எம்.ஜி.ஆரை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துப் போங்கள்'' என்று கலை நண்பர்கள் பலரும் அப்பாவை கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அதுவரை எடுத்த 10 ஆயிரம் அடி பிலிமையும் தூக்கிப்போட்டு விட்டு, அதே கதையை "ராணி லலிதாங்கி'' என்ற பெயரில் சிவாஜி -பானுமதியை வைத்து எடுத்து முடித்தார். இந்தப்படத்தில்தான் அதுவரை `பிரமிளா'வாக இருந்த நடிகை "தேவிகா'' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.
தான் நடித்து வந்த படத்தை பாதியில் விட்டு, சிவாஜியை வைத்து எடுத்தது எம்.ஜி.ஆருக்கு கோபம் ஏற்படுத்தவே செய்தது. உடனே தனது வக்கீல் மூலம் அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அப்பா பதிலுக்கு தனது வக்கீல் மூலம் பதில் நோட்டீஸ் அனுப்பினார். அதில், "நான் "லலிதாங்கி'' என்று எம்.ஜி.ஆரை வைத்து எடுத்தது வேறு படம். இப்போது சிவாஜியை வைத்து எடுப்பது வேறு படம். இதற்குப் பெயர் "ராணி லலிதாங்கி'' என்று கூறியிருந்தார்.
அப்பா இப்படி செய்த பிறகும்கூட எம்.ஜி.ஆர். அவரிடம் கோபித்துக்கொள்ளவில்லை. "நமக்குள் நடந்தது கொள்கை ரீதியிலான மோதல். அவரவர் கொள்கையில் உறுதியாக இருக்கும்போது இதுமாதிரியான நிகழ்வுகள் சகஜம்'' என்று பெருந்தன்மையாக கூறியதோடு, தொடர்ந்து தனது படங்களில் அப்பாவுக்கு பாட்டெழுதவும் வாய்ப்பு அளித்தார்.''
- கவிஞர் தஞ்சை ராமையாதாஸ்பற்றி அவரது மகள் விஜயராணி . ( மாலை மலர் )


TamilsGuide
ஆண்டவனே இல்லையே..தில்லை தாண்டவனே உன்போல்
