TamilsGuide

மனோகரா, உன்னை ஏன் அழைத்திருக்கிறேன் தெரியுமா?

நடிகர்திலகம் திரு. சிவாஜிகணேசன் அவர்கள் நடிப்பில் வெளிவந்த பராசக்தியும், மனோகராவும் கலைஞரின் வசனங்களுக்காகவே இன்றளவும் பெரும் பெயர் திரைக்காவியங்கள். அதிலும் மனோகரா திரைப்படத்தில் வரும் அரசவை காட்சி வசனங்கள் அனல் பறக்கக்கூடியவை. அந்த மொத்த காட்சியின் வசனத்தை இங்கே பதிவேற்றியிருக்கிறேன். ஒருமுறை முயன்று இந்த வசனங்களை வாய்விட்டு சொல்லிப்பாருங்கள், கலைஞரின் பேனா செய்த தமிழ் ஜாலங்கள் உங்களுக்கு புரியும்...
அரசன் : மனோகரா, உன்னை ஏன் அழைத்திருக்கிறேன் தெரியுமா?
மனோகரன் : திருத்திக்கொள்ளுங்கள் தயவுசெய்து. அழைத்து வரவில்லை, இழுத்து வர செய்திருக்கிறீர்கள்.
அரசன் : ம். என் கட்டளையை தெரிந்து கொண்டிருப்பாய் நீ.
மனோகரன் : கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை. பொன்னும், மணியும் மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து, கண்ணே, முத்தே, தமிழ் பண்ணே என்றெல்லாம் குலவி கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தன தொட்டிலிலே, வீரனே, என் விழி நிறைந்தவனே, வீரர் வழி வந்தவனே என்று யாரை சீராட்டி, பாராட்டினீர்களோ, அவனை, அந்த மனோகரனை, சங்கிலியால் பிணைத்து சபைநடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டுமென்ற உங்கள் தணியாத ஆசைக்கு பெயர், கட்டளையா தந்தையே?
அரசன் : நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி. தந்தை முன் தனையனல்ல இப்போது.
மனோகரன் : குற்றவாளி, ஹ்ம். யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே, தந்தையின் முன் தனியனாக அல்ல. பிரஜைகளில் ஒருவனாக இதை கேட்கிறேன். கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா? நாட்டை கவிழ்க்கும் குள்ளநரி வேலை தான் செய்தேனா? குற்றமென்ன செய்தேன் கொற்றவனே, குற்றமென்ன செய்தேன்? கூற மாட்டீர்களா? நீங்கள் கூற வேண்டாம். இதோ, அறம் கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள், மறவர்குடி பிறந்த மாவீரர்கள் இருக்கிறார்கள், மக்களின் பிரதிநிதிகள், இந்த நாட்டின் குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும். நான் என்ன குற்றம் செய்தேன்?
மக்களில் ஒருவர் : குற்றத்தை மஹாராஜா கூறத்தான் வேண்டும்.
சபையோர் அனைவரும் : ஆமாம், கூறத்தான் வேண்டும்.
அரசன் : இது உங்களுக்கு சம்மந்தம் இல்லாதது.
மனோகரன் : சம்மந்தமில்லாதது சபைக்கு வருவானேன். குடும்பத்தகராறு கொலு மண்டபத்திற்கு வரும் விசித்திரத்தை, சரித்திரம் இன்று தான் முதன்முதலாக சந்திக்கிறது மஹாராஜா.
அரசன் : போதும் நிறுத்து. வசந்த விழாவில் நீ செய்த தவறுக்காக, வசந்தசேனையிடம் நீ மன்னிப்பு கேட்கவேண்டும்.
மனோகரன் : அதற்க்கு தான் காரணம் கேட்கிறேன்.
அரசன் : எதிர்த்து பேசுபவர்களுக்கு ராஜசபையில் என்ன தண்டனை தெரியுமா?
மனோகரன் : முறைப்படி மணந்த ராணிக்கு சிறைத்தண்டனை அளித்துவிட்டு, மூலையில் பிறந்ததற்கு முடிசூட்டியவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையை விட குறைவானது தான்.
அரசன் : மனோகரா, நீ சாவிற்கு துணிந்து விட்டாய்.
மனோகரன் : ஆமாம். நீங்கள் வீரராக இருக்கும்பொழுது பிறந்தவன் அல்லவா நான். சாவு எனக்கு சாதாரணம்.
அரசன் : ஆத்திரத்தை கிளப்பாதே. நிறைவேற்று. அரசன் உத்தரவு.

மனோகரன் : அரசன் உத்தரவென்ன? ஆண்டவனின் உத்தரவிற்க்கே காரணம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அரசே, 'சிறைச்சாலைக்கு செல்லவேண்டும் தாய்' என்று கேள்விப்பட்ட பிறகு அடங்கிக்கிடப்பவன் ஆமை.
அரசன் : தாய்க்கும், தந்தைக்கும் வேற்றுமை அறியாத மூடனே, தந்தையின் ஆணையை கேட்டு, தாயாரின் தலையை வெட்டியெறிந்த பரசுராமனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா நீ?
மனோகரன் : பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்.
அரசன் : கடைசி கேள்வி. என் கட்டளையை வணங்கப்போகிறாயா இல்லையா?
மனோகரன் : மன்னிப்பு கேட்கவேண்டும் மனோகரன்.
அரசன் : அதுவும் அரை நொடியில்.
மனோகரன் : அரைநொடியென்ன? அதற்குள்ளாகவே. ஆனால் யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் தெரியுமா? கோமளவல்லி, கோமேதக சிலை, கூவும் குயில், குதிக்கும் மான் என்றெல்லாம் உம்மால் புகழப்படும் இந்த கோணல் புத்திக்காரியின் கொள்ளிக் கண்களை, கொடிய நாக்கை, என் கூர்வாளுக்கு இரையாக தந்துவிட்டு, அதை எதிர்த்தால் உம்மையும், உமக்கு பக்கத்துணையாக வந்தால் அந்த பட்டாளத்தையும் பிணமாக்கிவிட்டு, சூனியக்காரிக்கு ஆளவட்டம் சூட்டியவர்களை சுடுகாட்டிற்கு அனுப்பிவிட்டேன்' என்று சுழலும் வாளுடன், சூழும் புகழுடன் என் அன்னையிடம் ஓடி மன்னிப்பு கேட்க வேண்டும். நிறைவேற்றட்டுமா அந்த உத்தரவை? தயார் தானா, தயார் தானா? ஏன் நடுங்க வேண்டும்? ஹம். புருசோத்தமர், போரிலே புலி. வாளெடுத்தால் வையம் கலங்கும். அவரா இப்படி பயப்படுகிறார்? பாவம், வேலின் கூர்மையை சோதித்த விரல்கள், இந்த வஞ்சகியின் விரல்களை அல்லவா ரசித்துக்கொண்டிருக்கிறது. பாசறையை பார்வையிட்ட கண்கள், இந்த பாம்பாட்டத்தின் பாவத்தில் அல்லவா லயித்து கிடக்கிறது. கோட்டை கொத்தளங்களை நினைத்துக் கிடந்த நெஞ்சம், இந்த குட்டிச்சுவரின் நிழலில் அல்லவா குளிர்ச்சி காணுகிறது.
அரசன் : பேசாதே.
மனோகரன் : ஊர் பேசுகிறது. உலகம் பேசுகிறது.
அரசன் : ஆமாம். நீ வேசி மகனென்று.
மனோகரன் : ஆ...
அரசன் : ஏன்? கேட்பதற்கு தித்திக்கிறதோ? ஆயிரம் முறை சொல்வேன். நீ வேசிமகன்.
மனோகரன் : அம்மா... இதோ, அந்த வாயை சுக்குநூறாக கிழித்தெறிகிறேன். விடு என்னை.
மனோகரன் : புருஷோத்தமரே, புரட்டுக்காரியின் உருட்டும் விழியிலே உலகத்தை காண்பவரே, மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மரவேந்தர் பரம்பரையிலே மாசாக வந்தவரே, மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே, குளிர்நிலவை கொள்ளிக்கட்டை என்று கூறிய குருடரே..,
என் தாய், அன்பின் பிறப்பிடம், அறநெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக்குறையா தங்கம். அவர்களை அவதூறு கூறிய உங்களது அங்கங்களை பிளந்தெறிவேன். இந்த துரோகப்பேச்சிற்கு உம்மை தூண்டிவிட்ட இந்த துர்ச்சையின் உடலை துண்டாடுவேன்.
துணிவிருந்தால், தோளிலே வலுவிருந்தால், எடுத்துக்கொள்ளூம் உமது வாளை, தடுத்துக்கொள்ளூம் உமது சாவை. தைரியமில்லாவிட்டால், தலுக்குக்காரியின் குலுக்கு சிரிப்பிலே நீர் கோழையாகிவிட்டிருந்தால், ஓடிவிடும் இதை விட்டு.
புறமுதுகு காட்டி ஓடும். புறநானூற்றின் பெருமையை ஊட வந்த புழுதிக்காற்றே, புறமுதுகு காட்டி ஓடும்.
கலிங்கத்துபரணியை மறைக்க வந்த காரிருளே! கால்பிடரியின் மீது படஓடும். ஓடும், ஓடும், ஓலமிட்டு ஓடும். ஓங்கார கூச்சலிட்டு ஓடும்.
ஏன் அவமானமாக இருக்கிறதா?
என் அன்னையை தூஷித்த சின்னஞ்சிறு புழுவே, ஏன் சிலையாக மாறிவிட்டீர்?
ஏ ராஜவிக்கிரகமே...! பழிவாங்கும் பக்தன் பூஜை செய்ய வந்திருக்கிறான். அப்படியே நில்லும், அசையாமல் நில்லும்.
இந்த சித்துவேலைக்காரியின் ரத்தத்தை கொண்டு உமக்கு அபிஷேகம் செய்விக்கிறேன்.இந்த நாசக்காரியின் நரம்புகளால் உமக்கு மாலை சூட்டுகிறேன். முல்லை சிரிப்பென புகழ்வீரே மோக போதையில், அந்த பல்லையெடுத்து உமக்கு அர்ச்சனை செய்கிறேன். பாவி, பார். பத்தினி ஈன்ற படுபாவி, பார், உன் பஞ்சனையாடியின் நீர் படும்பாட்டை...

 

Dhandapani Nirmala

Leave a comment

Comment