உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை வழங்க நார்வே நோபல் கமிட்டி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என வெளிப்படையாக அறிவித்தார். இந்திய- பாகிஸ்தான் உள்ளிட்ட பல போர்களை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தியுள்ளேன் எனத் தெரிவித்தார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிவு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் கோரிக்கை வைத்தன.
டிரம்பிற்கு நோபல் பரிவு வழங்கப்படாத நிலையில், நார்வே நோபல் கமிட்டியை வெள்ளை மாளிகை கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் செயுங் கூறுகையில் "அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவம் என்பதை மீண்டும் ஒருமுறை நோபல் கமிட்டி நிரூபித்துள்ளது. ஆனால், டொனால்டு டிரம்ப் தொடர்ந்து அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதை தொடர்ந்து செய்வார். போரை முடிவுக்கு கொண்டு வருவார். மக்கள் உயிரை காப்பாற்றுவார். அவர் மனிதாபிமான இதயத்தை கொண்டுள்ளார். டிரம்ப் தனது விருப்பத்தின் சக்தியால் மலைகளை கூட நகர்த்துவார். அவரை போன்று எவரும் இருக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், டொனால்டு டிரம்ப் இது தொடர்பாக நேரடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.


