TamilsGuide

H-1B விசா திட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் முக்கிய மாற்றங்கள்.. 

அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அண்மையில் உத்தரவிட்டது. மேலும் H-1B விசா தொடரான பல புதிய விதிகளும் அறிவிக்கப்பட்டன.

இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.

H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.

இந்நிலையில் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள கட்டண உயர்வு இந்தியர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

H-1B விசா புதிய விதிமுறைகள்:

புதிய H-1B விசா மனுக்களுக்கான கட்டணம் தற்போதுள்ள சுமார் $4,000 முதல் $6,000 என்ற நிலையிலிருந்து, $1,00,000 (ரூ. 88 லட்சம்) என உயர்த்தப்படுகிறது.எனினும், இந்தப் புதிய கட்டணம் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். விசா புதுப்பித்தல் அல்லது ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தாது என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

அடுத்ததாக, விசா பெறுவதற்கான சிறப்புத் தொழில் (Specialty Occupation) என்ற வரையறை கடுமையாக்கப்பட்டுள்ளது.

இனி, விண்ணப்பதாரரின் பட்டப்படிப்பும், அவர்கள் செய்யும் வேலையும் கண்டிப்பாக ஒரே துறை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

புதிய விதிமுறைகளின்படி H-1B ஊழியர்களைப் பிற நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்து அனுப்பும் கன்சல்டிங் மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனங்கள் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

ஊழியர்கள் அவர்கள் பணி செய்யும் நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு இருக்கின்றனரா அல்லது மூன்றாவது ஏஜென்சி மூலம் காண்டிராக்ட்-இல் இருக்கிறார்களா என்பது குறித்த கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், பல்கலைக்கழகங்கள், இலாப நோக்கற்ற ஆய்வு நிறுவனங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் போன்ற வருடாந்திர விசா ஒதுக்கீட்டு உச்சவரம்பில் இருந்து விலக்கு பெறும் நிறுவனங்களின் பட்டியலை டிரம்ப் நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும், நிரந்தரக் குடியுரிமைக்கான கிரீன் கார்டு செயல்முறையும் கடினமாக்கப்பட்டுள்ளது. அபரிமிதமான திறன் கொண்ட வெளிநாட்டு நிபுணர்களை பணியமர்த்தும் O-1A விசா முறையில் கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிட்டுள்ள்ளது.

இந்த முன்மொழிவுகள் தற்போது பொதுமக்கள் கருத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. இவை செயல்படுத்தப்பட்டால், அமெரிக்கப் பணிக்கான விசா அமைப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய மறுசீரமைப்பாக இருக்கும். 
 

Leave a comment

Comment