மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டான்லி அவென்யூவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் ஏழு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடஹமுல்ல பகுதியைச் சேர்ந்த பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் 5 வயது சிறுவனே நீச்சல் பயிற்சி நடவடிக்கையின் போது நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சம்பவம் நடந்த அன்று காலை குறித்த சிறுவன், தான் கல்வி பயிலும் தனியார் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், பயிற்சியாளர் மற்றும் பிற மாணவர் குழுவுடன் நீச்சல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளான்.
நீச்சல் பயிற்சியின் போது நீரில் மூழ்கிய சிறுவன், உடனடியாக மீட்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
எனினும் பின்னர், சிறுவன் உயிரழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த மிரிஹான பொலிஸார், சம்பவம் தொடர்பில் பாலர் பாடசாலையின் உதவி அதிபர், விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி, மாணவர்களுக்கு பொறுப்பான இரண்டு ஆசிரியர்கள், பாலர் பாடசாலையின் பணிப்பெண் மற்றும் இரண்டு நீச்சல் பயிற்றுனர்கள் உட்பட ஏழு பேரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


