TamilsGuide

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் – சபையில் வெடித்த கருத்து

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, உயர் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவில் கூறியதாகத் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் குறித்து நேற்று (09) சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நேற்று முந்தினம் நடைபெற்ற உயர்ப் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு வருகைதந்திருந்த ரவி செனவிரட்ன, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னால் இந்தியா இருப்பதாகவும் கூறியுள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த செய்திகளை மறுத்து பொலிஸ் ஊடகப் பிரிவினால் நேற்று அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நேற்று நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து கருத்து வெளியிட்டபோதே சபையில் இவ்வாறு சர்ச்சை ஏற்பட்டது.

இதன்போது தயாசிறி ஜயசேகர கூறுகையில்,

நான் உயர்ப் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவில் உறுப்பினராக உள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன அந்தக் குழுவுக்கு வருகை தந்திருந்தபோது, நிஸாம் காரியப்பர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்து, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் சகல ஊடகங்களும் எங்களிடம் கேட்கின்றன.

இந்நிலையில், தற்போது பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், அதன் பின்னால் இந்தியா இருப்பதாக அவர் கூறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் அவ்வாறான கருத்தைக் கூறவில்லை.

எனினும் இது தொடர்பில் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். உயர்ப் பதவிகள் தொடர்பான குழுவில் இதுபற்றி கூறாமல் நீதிமன்றத்தில் யார் பிரதான சூத்திரதாரி என்பதைக் கூறுங்கள். இது தொடர்பில் அமைச்சரோ, பிரதி அமைச்சரோ அல்லது பொறுப்புவாய்ந்த ஒருவரோ கூற வேண்டும்’’ என தெரிவித்தார்.

இதேவேளை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இது தொடர்பில் கூறுகையில்,

இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றது.

அந்த செயற்குழுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவர் அவற்றை ஊடகங்களுக்கு கூறவில்லை.

அது விசாரணையின் ஒரு பகுதி என்பதனால் அந்தக் கருத்தை நீக்குமாறு உத்தரவிட முடியாது. வேறு வழியில் இந்த விசாரணைகளை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு இடமளிக்க வேண்டாம் என்று கோருகின்றேன்’’ என கூறினார்.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் மீண்டும் கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர,

குறித்த விடயத்தை நிஸாம் காரியப்பரே டுவிட் செய்துள்ளார். உயர்ப்பதவிகள் தொடர்பான குழுவில் நடக்கும் விடயங்களை எவரும் டுவிட் செய்வதில்லை.

அவர் இன்று (வியாழகிழமை ) காலையிலேயே டுவிட் செய்திருந்தார். ஆனால் இந்த விடயங்கள் நேற்று (புதன்கிழமை) மாலையே வெளியாகியிருந்தன’’ என்றார்.

இதேவேளை இது தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகையில்,

உயர்ப் பதவிகள் தொடர்பான குழுவுக்கு அதிகாரிகள் பொறுப்புக் கூறலுடனேயே அழைக்கப்படுகின்றனர். பாராளுமன்றத்தில் உள்ள பிரதான செயற்குழுவாகும். இங்கு வரும் அதிகாரிகள் அந்தக் குழுவின் மீது நம்பிக்கை வைத்தே கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்.

அவ்வாறு பதிலளிக்கும் விடயங்கள் அந்த குழுவின் உறுப்பினர்களால் தனிப்பட்ட சமூக வலைத்தள கணக்குகளில் வெளியிடப்படுகின்றது என்றால் அது பாரதூரமான குற்றமாகும்.

அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு வெளியில் சமூக வலைத்தளங்களில் எழுதும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட எம்.பியை அழைத்து அவரை எச்சரிக்க வேண்டும். அவரை அந்த குழுவிலிருந்தும் வெளியேற்ற வேண்டும் என கூறினார்.
 

Leave a comment

Comment