வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை கடலூர் மாவட்டம் வடலூரில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். மேலும் இங்கு 6 காலங்களில் ஏழு திரைகளை நீக்கி தைப்பூச தினத்தன்று ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். மேலும் மாதந்தோறும் ஆறு திரைகளை விலக்கி மாத ஜோதி தரிசனம் நடைபெறும்.
இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து சன்மார்க்க அன்பர்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி ஜோதி தரிசனம் செய்வர். மேலும் இன்று வரை, தருமச்சாலையில் உள்ள அணையா அடுப்பு மூலம் பலரின் பசியைப் போக்கி வருகின்றது. அது மட்டுமின்றி சுனாமி, புயல், வெள்ளம் என எந்தப் பேரிடர் வந்தபோதும் தடையின்றி மக்களுக்கு உணவு வழங்கி தினமும் 3 வேளை சமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக திரை உலகின் பிரபலமான கதாநாயகன், இயக்குநர், பாடகர் என பன்முகத் திறமை கொண்ட நடிகர் சிலம்பரசன் இன்று காலை வடலூர் சத்திய ஞான சபைக்கு வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து சத்திய ஞான சபை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தியானம் மேற்கொண்டு சத்திய தர்மச்சாலை, அணையா அடுப்பு பகுதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து வள்ளலார் சித்திப்பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருவறை தரிசனம், வள்ளலார் தண்ணீரை கொண்டு விளக்கு எரியச் செய்த நற்கருங்குழி ஆகிய பகுதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார்.
ஏழை, எளிய, ஆதரவற்றவர்கள் பசியை போக்கி 3 வேளையும் அன்னதானம் வழங்கும் வள்ளலாரை போல தானும் குழந்தைகள் அனைவருக்கும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று வேண்டி கொண்டேன். அதனால் தான் வள்ளலார் அழைத்த உடன் வடலூர் சத்திய ஞான சபைக்கு வருகை தந்து வள்ளலார் சுவாமிகளை தரிசனம் செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் நாளை காலை 8.09 மணிக்கு வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்தது. இந்நிலையில் இன்று காலை படத்தின் டைட்டில் வெளியான நேரத்தில் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் நடிகர் சிம்பு தியானம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


