வர்த்தக வரி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நட்பு பாராட்டி வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஆகியோரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்று விருந்து அளித்தார். பாகிஸ்தான் தற்போது கடுமையான நிதிப்பற்றாக்குறையால் தத்தளித்து வருகிறது.
இதை டிரம்ப் சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார். பாகிஸ்தானில் உள்ள அரிய கனிம வளங்களை அமெரிக்கா வெட்டி எடுத்துக் கொள்ள விரும்பினார். இது தொடர்பாக பாகிஸதான் பிரதமரிடம் பேசினார். அவரும் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.
கடந்த முறை அமெரிக்கா சென்றபோது, பாகிஸ்தானில் உள்ள அரிய வகை கனிமங்களின் மாதிரிகளை டிரம்பிடம் காண்பித்துள்ளார் ஷெபாஷ் ஷெரீப்.
இதனைத் தொடர்ந்து 500 மில்லியன் டாலருக்கு பாகிஸ்தானுக்கும், அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெட்டி எடுக்கப்பட்ட கனிம வளங்கள் அடங்கிய முதல் கப்பல் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு கனிம வளங்களை விற்பனை செய்வதற்கு இம்ரான் கான் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் ரகசிய ஒப்பந்தம் எனக் குற்றம்சாட்டியுள்ளது.


