TamilsGuide

அரங்கு நிறைந்த மக்களோடு தமிழருவி சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றம்

சமூக செயற்பாட்டாளரும் காரைநகர் மண்ணின் மைந்தனும் மக்கள் அபிமானத்தைப் பெற்ற காரை சிவகுமாரன் அவர்களும் அவரோடு இணைந்து காரைநகர் அன்பர்களும் ஏற்பாடு செய்த சிறப்பு பட்டிமண்டபம் 04 ஒக் 2025 சனிக்கிழமை கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் சிறப்பாக நடை பெற்றது.

ஈழத்தில் இருந்து வருகை தந்திருந்த தமிழருவி சிவகுமாரன் அவர்களது தலைமையில் கனடாவை வாழ்விடமாகக் கொண்டிருக்கும் பேச்சாளர்களது ஆரோக்கியமான கருத்துக்களுடன் சிறப்பாக பட்டிமன்றம் நடைபெற்றது.

எம் தமிழர்களுக்கு நிறைவான வாழ்க்கை புலத்திலா"...? அல்லது "தாயகத்திலா"...? என்ற தலைப்பில் திரு பொன்னையன் விவேகானந்தன் அவர்கள் தலைமையில் புலத்தில்" என்றும் திருமதி கோதை அமுதன் அவர்கள் தலைமையில் தாயகத்தில்" என்றும் பட்டிமன்றம் அமைந்தது.

பட்டிமன்றம் ஆரம்பமாவதற்கு முன்னால் தமிழரங்கம் வானொலியின் அறிவிப்பாளரும் மேடை அறிவிப்பாளருமான திரு ஞானபண்டிதர் அவர்கள் தமிழருவி சிவகுமாரன் அவர்கள் பற்றிய அறிமுக உரை ஒன்றை நிகழ்த்தினார். அவர் தனது இளம் கால நினைவுகளை நினைவு கூர்ந்து, தங்கள் சொந்த ஊரான காரைநகரில் சிவகுமாரனுடன் அறிமுகமானதையும், அவர்கள் கம்பன் கழகத்தை எவ்வாறு காரைநகரில் தொடங்கினார்கள் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

பட்டிமன்றப் பேச்சாளர்கள் அனைவரும் பொருள் பொதிந்த விடயங்களுடன் மிகவும் கலகலப்பாகவும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். நடுவராக அமைந்த தமிழருவி சிவகுமாரன் அவர்கள் இடைக்கிடையே கருத்துக்களையும் நகைச்சுவையையும் வழங்கி அரங்கத்தைக் கட்டிப் போட்டிருந்தார்.

நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் உள்ளூர் பேச்சாளர்களோடு நடைபெற்ற ஒரு பட்டிமன்றத்திற்கு அரங்கு நிறைந்த மக்கள் கூடியது இதுவென்று துணிந்து சொல்லலாம்.

இந்நிகழ்வை மிகச் சிறப்பாக ஒழுங்கு செய்த காரை.சிவகுமாரன் (கனடா) அவர்கள் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவராவார். ஒரு சில நண்பர்களோடு தனது சொந்த ஊர் மக்களையும் ஏனைய மக்களையும் அழைத்து விழாவினைச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்.

விழாவுக்கு வந்திருந்தவர்களில் அரைவாசிப் பேர் காரைநகரைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றாலும் காரைநகர் மக்கள் தன் ஊரின் மைந்தனொருவருக்கு மரியாதை வழங்கி வந்து சிறப்பித்தமை தீர்க்கதரிசிகள் எவரும் ஊரில் அங்கீகரிப்படுவதில்லை என்ற இறைமகன் இயேசுவின் வார்த்தைகளைப் பொய்ப்பித்தனர் என்ற சொல்லலாம். ஊரவனை ஊரவன் மதிப்பதில்லை என்ற கருத்தைப் பொய்ப்பித்த காரைநகர் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து நிறைவானதொரு மகிழ்வோடு வீடு வந்து சேர்ந்தோம். விழா நிகழ்வினை மதிப்புக்குரிய பி.எஸ்.சுதாகரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

- பாரதி ஆனந்தன்
 

Leave a comment

Comment