TamilsGuide

மோல்டோவா – குழப்பம் மிகுந்த எதிர்காலம்?

மேனாள் சோவியத் ஒன்றிய நாடான மோல்டோவாவில் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மோல்டாவாவின் எதிர்காலம் ஐரோப்பிய ஒன்றியம் சார்ந்து அமையப் போகிறதா அல்லது ரஸ்யாவின் பாதையில் செல்லப் போகிறதா என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றிய சார்பு ஆளுங் கட்சி தேர்தலில் மிகக் குறைந்த விழுக்காடு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளர்களில் 52 விழுக்காடு மாத்திரமே வாக்களித்ததாகத் தகவல்கள் வெளியாகி

உள்ள நிலையில், புலம்பெயர்ந்து வாழும் வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்றே ஆளுங் கட்சி வெற்றி பெற்றதாகவும், புலம்பெயர்ந்த வாக்களர்களில் அநேகர், குறிப்பாக ரஸ்யாவில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

101 உறுப்பினர்களைக் கொண்ட மோல்டோவா நாடாளுமன்றத்துக்கான தேர்தல் செப்டெம்பர் 28ஆம் திகதி நடைபெற்றது. இதில் உள்நாட்டில் வாழும் மற்றும் வெளிநாடுகளில் வாழும் வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதில் ஐரோப்பிய சார்புக் கட்சியான செயற்பாடு மற்றும் ஒற்றுமைக்கான கட்சி 50.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. இந்தக் கட்சியின் சார்பில் 55 உறுப்பினர்கள் தெரிவாகினர். சாதாரண பெரும்பான்மைக்கு 52 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில் மூன்று

உறுப்பினர்களை மாத்திரம் அதிகமாக ஆளுங் கட்சி பெற்றுக் கொண்டுள்ளமை கவனத்தில் கொள்ளத் தக்கது. இறுதியாக 2021இல் நடைபெற்ற தேர்தலில் தற்போதைய ஜனதிபதி மையா சான்டு தலைமையிலான இந்தக் கட்சி 63 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. மிகவும் பரபரப்பான சூழலில் நடைபெற்ற தற்போதைய தேர்தலில் ஆளுங் கட்சி 8 உறுப்பினர்களை இழந்திருப்பதைப் பார்க்க முடிகின்றது.

ஆளுங் கட்சியை எதிர்த்துக் களங் கண்ட எதிர்க் கட்சிகள் இந்தத் தேர்தலில் ஒட்டு மொத்தமாக 49.8 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுக் கொண்டன. தச விகிதத்தில் வெறும் 0.2 விழுக்காடு வாக்குகளை அதிகமாகப் பெற்றே ஆளுங் கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளமை நோக்கத்தக்கது.

எதிர்க் கட்சிகள் வரிசையில் பிரதான எதிர்க் கட்சிக் கூட்டணியான ரஸ்ய ஆதரவு நிலைப்பாடு கொண்ட தேசபக்தக் கூட்டணி 24.17 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியின் சார்பில் 26 உறுப்பினர்கள் தெரிவாகினர். கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் இந்தக் கூட்டணியும் 6 உறுப்பினர்களை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலைநகர் சிஸ்னவ் மாநகர முதல்வாரன அயன் சிபான் தலைமையிலான மாற்றுக் கட்சி 7.96 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. முதல் தடவையாகத் தேர்தலில் பிரவேசித்த இந்தக் கட்சி 8 ஆசனங்களைப் பெற்று ஆச்சரியம் ஊட்டியுள்ளது.

இடதுசாரிக் கட்சியான எங்கள் கட்சி 6.2 விழுக்காடு வாக்குளைப் பெற்று 6 ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது. இந்தக் கட்சி முதல் தடவையாக நாடாளுமன்றத்தில் பிரவேசித்துள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள உள்நாட்டு ஜனநாயகக் கட்சியும் ஆறு ஆசனங்களைப் பெற்றுள்ளது. இந்தக் கட்சி 5.6 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

நிலத்தால் மூடப்பட்ட ஒரு சிறிய நாடாக மோல்டோவா அறியப் பட்டாலும்,  ரஸ்யாவுக்கு அண்மித்ததாக உள்ள இந்த நாட்டின் அமைவிடம் காரணமாக அதன் கேந்திர முக்கியத்துவம் பூகோள அரசியலில் அந்த நாட்டை கவனத்துக்கு உரியதாக மாற்றியுள்ளது.  ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுக்க ரஸ்யா தயாராகி வருகிறது என பலம்பொருந்திய மேற்கு ஐரோப்பிய நாடுகளான யேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்டவை தொடர்ச்சியாகக் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், குறித்த படையெடுப்பு மோல்டோவா

ஊடாக நிகழலாம் என குறித்த நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.  இந்நிலையில்,மோல்டோவாவில் நேட்டோ நாடுகளின் படைகளை நிறுத்தி வைப்பது மாத்திரமன்றி, மேற்குலகு சார்பான அரசாங்கம் ஒன்று அந்த நாட்டின் ஆட்சிக் கதிரையில் அமர்ந்திருப்பதை தமக்குச் சாதகமான ஒரு அம்சமாக அவை கருதி வருகின்றன. தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக தற்போதைய ஜனாதிபதி சன்டு தொடர்ந்து பதவியில் அமர்ந்திருப்பதையும்,  ஆளுங் கட்சி தொடர்ந்து நீடிப்பதையும் இலக்காகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் செயற்பட்டு வருகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தோடு நெருக்கமாகச் செயற்பட விரும்பும் மோல்டோவாவின் ஆளுங் கட்சி மற்றும் ஜனாதிபதி ஆகியோர் ரஸ்யாவுக்கு எதிரான வெறுப்பைக் கக்கி வருவதைப் பார்க்க முடிகின்றது. 2022 பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஸ்யா மேற்கொண்ட படையெடுப்பை அடுத்து, ரஸ்யா மீதான வெறுப்பு மோல்டோவா ஆளுங் கட்சியினரிடம்

அதிகரித்து இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. மோல்டோவாவில் உள்ள ரஸ்ய மொழி பேசும் மக்களைக் குறிவைத்து பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளையும் அரசாங்கத் தரப்பு மேற்கொண்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மோல்டேவாவில் இருந்து பிரிந்துசென்று தனியான தேசமாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்டுள்ள திரான்சுனிஸ்திரியாவில் 10,000 வரையான ரஸ்ய அமைதி காக்கும் படையினர் நிலை கொண்டுள்ளமை தெரிந்ததே. ரஸ்ய மொழி பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தப் பிராந்தியத்தின் சுயாதிபத்தியத்தை நிராகரிக்கும் நிலைப்பாட்டில்

மோல்டோவாவும், அயல் நாடான உக்ரைனும் செயல்பட்டு வருகின்றன. எப்போதும் வெடித்துச் சிதறக் கூடிய எரிமலையாக இந்தப் பிராந்தியம் இருந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அடுத்ததாக ரஸ்யா படையெடுக்கக் கூடிய நாடாக மோல்டோவா உள்ளது என மேற்குலக படை வல்லுநர்கள் கருத்துக் கொண்டுள்ளனர்.

ஒரு நாட்டில் தேர்தல் நடைபெறும் வேளையில், அந்த நாட்டின் பொருளாதாரம், வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை விடயங்களே பேசு பொருளாக அமைந்திருப்பது வழமை. ஆனால், மோல்டோவாவில் நடைபெற்று முடிந்த தேர்தல் பரப்புரைகளில் வழமையான இத்தகைய விடயங்களுக்கு அப்பால் ரஸ்யத் தலையீடு பற்றிய விடயமே மிகப் பாரிய பேசுபொருளாக அமைந்திருந்தது. ஆளுங் கட்சியும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ரஸ்ய அபாயம் பற்றியே தொடர்ச்சியாகப் பேசி வந்தன. அத்தகைய அபாயம்

தடுக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தன.

அரசாங்க நடவடிக்கையின் ஒரு அம்சமாக ரஸ்ய சார்பு எனக் கருதப்பட்ட ஒரு சில அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன, அத்தகைய கட்சிகளின் பிரிதிநிதிகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். தடுப்புக் காவலிலும், வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டனர். கட்சிகளின் அலுவலகங்கள், கட்சிப் பொறுப்பாளர்களின்

வீடுகள் காவல்துறையின் தேடுதல்களுக்கு இலக்காகின. பொதுத் தேர்தலுக்கு முந்திய தினம் வரை இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மறுபுறம், ரஸ்யாவில் வாழும் மோல்டோவா குடியுரிமை பெற்றவர்களுக்கான வாக்களிக்கும் உரிமை பெரிதும் மறுக்கப்பட்டதாக ரஸ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஸ்யாவில் 5 இலட்சம் வரையான மோல்டோவா குடிமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் 4,000 பேர் வரையானோரே இம்முறை வாக்களிப்பில் கலந்து கொண்டிருந்தனர். இவர்கள் வாக்களிக்கவென 2 வாக்களிப்பு நிலையங்கள் மாத்திரமே அமைக்கப்பட்டு இருந்தன. குறைந்தது 70 வாக்களிப்பு நிலையங்களாவது அமைக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும் என ரஸ்யத் தரப்பில் ஆதங்கம் தெரிவிக்கப்பட்டு இருந்தது அதேவேளை,  ரஸ்யாவில் வாழும் மோல்டோவா வாக்காளர்கள்

வாக்களிப்பு நிலையங்களுக்கு குழுக்களாக அழைத்து வரப்பட்டதாகவும், இத்தகைய செயற்பாடு மோல்டோவாவின் தேர்தல் விதிகளுக்கு முரணானவை எனவும் மோல்டோவா அரசாங்கம் கண்டனம் தெரிவித்திருந்தமையைப் பார்க்க முடிகிறது.

தற்போதைய நிலையில் ஆளுங் கட்சிக்கு ஆதரவான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் ஆளுங் கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. எனினும், ஆளுங் கட்சியின் ஐரோப்பிய சார்பு நிலைப்பாட்டுக்கு எதிரான உணர்வுகள்

உள்நாட்டில் அதிகரித்து வருவதைக் காண முடிகின்றது. இந்த நிலையில்  மோல்டோவாவின்  ஐரோப்பிய சார்பு நிலைப்பாடு நீண்ட காலத்துக்கு நீடிக்குமா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஐரோப்பிய நாடுகளினதும் ரஸ்யாவினதும் போட்டிக் களமாக மோல்டோவா கட்டமைக்கப்பட்டு உள்ள நிலையில் அந்த நாட்டின் எதிர்கால அரசியல் குழப்பம் நிறைந்ததாகவே எதிர்காலத்தில் நீடிக்கப் போகின்றது என்பதே கசப்பான யதார்த்தம்.

சுவிசிலிருந்து சண் தவராஜா

Leave a comment

Comment