TamilsGuide

கனடாவில் தவறுதலாக உயிர் நண்பனை சுட்டுக் கொன்ற சிறுவனுக்கு தண்டனை

கனடாவில் தவறுதலாக உயிர் நண்பனை சுட்டுக் கொன்ற சிறுவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

தான் ஓர் குற்றக் கும்பல் உறுப்பினர் என வெளிப்படுத்திக்கொள்ள முயன்ற போது, தன்னுடைய உயிர் நண்பனை தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

15 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் நடந்தபோது தண்டிக்கப்பட்ட சிறுவன் 13 வயதிலும், பலியானவர் 12 வயதிலும் இருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய சட்டத்தின் கீழ் குற்றவாளியின் பெயர் வெளிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த சிறுவன் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாகவும் அவருக்கு, நீதிபதி லிசா வாட்சன், 18 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளார்.

”சிறுவன் நண்பனை சுட விரும்பவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மது அருந்திய நிலையில் துப்பாக்கியுடன் விளையாடி, படங்கள் எடுத்து பகிர்வது மிக அபாயகரமான செயலாகும். அதனால் ஆபத்து ஏற்படும் என்பதை முன்னரே எதிர்பார்க்க முடியும்,” என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024 பெப்ரவரி 19ம் திகதி சஸ்காடூன் நகரில் உள்ள மேதசன் டிரைவ் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.  
 

Leave a comment

Comment