TamilsGuide

உலக வரலாற்றில் புதிய சாதனை படைத்த மஸ்க் 

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வரலாற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

உலக வரலாற்றில் முதல் முறையாக 500 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்பை எட்டிய நபர் என்ற சாதனையை மஸ்க் படைத்துள்ளார்.

இலத்திரனியல் கார் நிறுவனமான டெஸ்லா மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற தொழில் நிறுவனங்களின் பங்குச் சந்தைப் பெறுமதி இந்த ஆண்டு விலை உயர்வைக் கண்டுள்ளதால், அதன் நிறுவனர் மஸ்க் இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

புதன்கிழமை நியூயார்க் நேரப்படி பிற்பகலில் மஸ்கின் சொத்து மதிப்பு 500.1 டொலர் பில்லியனை எட்டியதாகவும், பின்னர் சிறிதளவு குறைந்து 499 பில்லியன் அளவில் நிலைத்ததாகவும் போர்பஸ் Forbes பில்லியனர்கள் குறியீட்டில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

டெஸ்லாவுடன் சேர்ந்து, செயற்கை நுண்ணறிவு நிறுவனம் எக்ஸ்ஏஐ, விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட மஸ்கின் ஏனைய நிறுவனங்களின் சந்தைப் பெறுமதிகளும் அண்மைய மாதங்களில் அதிகரித்துச் செல்லும் போக்கினை பதிவு செய்துள்ளன.

எலோன் மஸ்க் உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மிகப்பெரிய இடைவெளியுடன் முதலிடத்தில் திகழ்கிறார் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

போர்பஸ் நிறுவனத்தின் செல்வந்தர்கள் பட்டியலில் ஒரேகல் (Oracle) நிறுவனத்தின் ஸ்தாபகர் லாரி எலிசன் தற்போது சுமார் 350.7 பில்லியன் டொலர் சொத்துடன் இரண்டாம் இடத்தினை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்லா நிறுவனத்தின் பங்குப் பெறுமதிகளே மஸ்கின் பிரதான சொத்தாக காணப்படுகின்றது. இந்த ஆண்டு டெஸ்லா பங்குகள் 14% க்கும் அதிகமாக உயர்வினை பதிவு செய்துள்ளது.

மேலும் கடந்த மாதம், மஸ்க் சுமார் 1 பில்லியன் டொலர் பெறுமதியான டெஸ்லா பங்குகளை தனிப்பட்ட முறையில் கொள்வனவு செய்ததாக அறிவித்திருந்தார்.

எவ்வாறெனினும் சீனாவின் பீவைடி (BYD) வாகனங்களுக்கு உலக சந்தையில் நல்ல கிராக்கி நிலவுவதனால் டெஸ்லா நிறுவனம் சரிவினை சந்திக்கக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனை கருத்திக் கொண்டு டெஸ்லா செயற்கை நுண்ணறிவு தொடர்பான தொழிற்துறைகளில் கூடுதல் முனைப்பு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment