காசாவில் புதிய போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, காசா போர் நிறுத்தம் மற்றும் அமைதி தொடர்பான 20 அம்சத் திட்டம் குறித்து டிரம்ப் செய்தியாளர்களிடம் விவரித்தார்.
அவர் கூறியதாவது, காசாவுக்கான தனது 20 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஏற்றுக்கொண்டதற்காக அவருக்கு நன்றி.
ஹமாஸ் இந்த அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்தால், அந்த அமைப்பின் அச்சுறுத்தலை அழித்து வேலையை முடிக்க இஸ்ரேலுக்கு எனது முழு ஆதரவும் இருக்கும்.
காசா போரில் அமைதியைப் ஏற்படுத்துவதில் வாஷிங்டன் மிக மிக அருகில் வந்துவிட்டது. அனைவரும் ஒரு சிறப்பான ஒப்பந்தத்திற்காக இணைந்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
20 அம்சத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
ஒப்பந்தம் ஏற்பட்டால், போர் உடனடியாக முடிவுக்கு வரும், மேலும் ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டவுடன் இஸ்ரேலியப் படைகள் காசாவில் இருந்து பல கட்டங்களாக படிப்பிடியாக வெளியேரும்.
மேலும் அங்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தற்காலிக சர்வதேச படை நிலைநிறுத்தப்படும்.
டிரம்ப்பின் தலைமையில் ஒரு இடைக்கால நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும்.
ஹமாஸ் போராளிகள் முழுமையாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அமைதியை ஏற்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.
பாலஸ்தீனியர்கள் வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள், அதற்குப் பதிலாக காசாவை மீட்ருவாக்கம் செய்ய அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
முன்னதாக, நேதன்யாகு ஐ.நா.வில் பேசியபோது, ஹமாஸுக்கு எதிராக தொடங்கிய வேலையை முடிப்போம் என்று அடித்துகூறினார். மேலும், பாலஸ்தீனம் என்ற ஒரு தேசம் கிடையாது என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே காசாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.


