TamilsGuide

ஜப்பான் பிரதமர் – இலங்கை ஜனாதிபதி இடையில் விசேட சந்திப்பு

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள, ​​ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று டோக்கியோவில் இடம்பெற்றுள்ளது.

ஜப்பானுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த இரு தரப்பினரும், இரு நாடுகளுக்கும் இடையில் நிறுவப்பட்ட ஆழமானதும், விரிவாக்கப்பட்டதுமான கூட்டாண்மையின் கட்டமைப்பின் கீழ், பாதுகாப்பு, பொருளாதாரம், முதலீடு மற்றும் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தவும், விரிவுபடுத்தவும் தங்கள் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

சர்வதேச நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்து செயற்படுத்துதல் மற்றும் கடன் மறுசீரமைப்பு மூலம் இலங்கையின் பொருளாதார மீட்சிப் பாதையை பிரதமர் இஷிபா பாராட்டியதுடன், இலங்கையின் சீர்திருத்த முயற்சிகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் (OCC) இணைத் தலைமைகளில் ஒன்றாக விளங்குவதோடு, இவ்வாண்டு மார்ச் மாதம் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் உறுப்பு நாடொன்று, இலங்கையுடன் செய்துகொண்ட கடன் மறுசீரமைப்பு குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த முதல் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் உறுப்பினராக ஜப்பான் விளங்குகின்றமை உட்பட, இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் முன்கூட்டியே கைச்சாத்திட உதவியமைக்கும், ஜப்பானின் தலைமைக்கு ஜனாதிபதி திஸாநாயக்க பாராட்டுத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ள திட்டத்தின் கீழ் பல்வேறு சீர்திருத்தங்களை தொடர்ந்து செயற்படுத்துவதும், கடன் மறுசீரமைப்பு செயன்முறையை முன்கூட்டியே முடிப்பதும் இலங்கைப் பொருளாதாரத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் மீட்டெடுக்க எதுவாக அமையும் என்பதை இரு தரப்பினரும் அங்கீகரித்தனர்.

கடன்சார் நிலைபேறானதன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டுக் கடன்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.

2024 ஆம் ஆண்டில், முன்னர் கைச்சாத்திடப்பட்ட 11 யென் கடன் திட்டங்களை மீண்டும் தொடங்குவது உட்பட, கடன் வழங்கிய ஏனைய நாடுகளைக்காட்டிலும் ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவிற்கு ஜனாதிபதி திஸாநாயக்க நன்றி தெரிவித்தார்.

இலங்கையில் இணைப்பை வலுப்படுத்தவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் பங்களிக்கும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டத்தின் (கட்டம் 2) ஏலம் மீண்டும் தொடங்கப்பட்டதை இரு தரப்பினரும் வரவேற்றதுடன், இது தொடர்பிலான செயன்முறையை விரைவாக முடிப்பதற்கான ஈடுபாட்டை உறுதிப்படுத்தினர்.

இதேவேளை, சிறிய அளவிலான பால் பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் சகலரையும் உள்ளடக்கிய பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், பாலுற்பத்தித் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கான ஜப்பானின் மானிய உதவி தொடர்பான குறிப்புகளில் கைச்சாத்திடுவதையும் பரிமாறிக்கொள்வதையும் இரு தரப்பினரும் வரவேற்றனர்.

இலங்கையின் நிலைபேறான பொருளாதார அபிவிருத்திக்கு, கொழும்பு போன்ற முக்கிய நகரங்களில் நகர்ப்புற போக்குவரத்தை சீரமைக்க உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துசார்ந்த தீர்வுகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.

“ஏற்றுமதி சார்ந்த தொழிற்துறை வழித்தடத்தை உருவாக்குதல்” என்ற எண்ணக்கருவிலான பயணப்பாதை வரைபடத்தின் அடிப்படையில் ஜப்பானிய முதலீட்டுடன், ஏற்றுமதியை வலுப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்குமான வழிகள் குறித்து மேலும் விவாதிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இது தொடர்பாக, இலங்கை தொழில் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கூட்டாக ஆராயும் அரசுகளுக்கிடையேயான பொருளாதாரக் கொள்கைசார் உரையாடலை மீண்டும் தொடங்க இரு தரப்பினரும் இணங்கினர்.
 

Leave a comment

Comment