கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.
நடிகர் மம்மூட்டி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மன வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அவரை தொடர்ந்து நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கரூரில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்காகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.


