தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தங்காலை ‘ஐஸ்லாந்து’ ஆவதை தடுத்துள்ள அரசாங்கம், மீரிகமையை ‘கஞ்சா தோட்டமாக’ மாற்றுவது சரியா? என ஓமல்பே சோபித தேரர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக அரசாங்கத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ள கஞ்சா உற்பத்தித் திட்டம் தொடர்பில் அகில இலங்கை மகா பௌத்த சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து ஓமல்பே சோபித தேரர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ” 2022 மற்றும் 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட விடயம் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. கஞ்சா உற்பத்தியை நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டும் ஒரு வருமான மூலமாகப் பார்ப்பதை அங்கீகரிக்க முடியாது.
இந்த யோசனையை முன்வைத்தவர்கள் முற்றாக மக்களால் நிராகரிக்கப்பட்டு தற்போது காணாமல் போயுள்ளனர். இது குறிந்து அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திடம் நாடாளுமன்றத்தில் சில கேள்விகளை எழுப்பினார்.
‘இந்த கஞ்சா உற்பத்தி வெற்றியளிக்கும் வேலைத்திட்டம் என நீங்கள் கூறினால் அதற்கான சந்தை என்ன எனக் கூறுங்கள்? எந்தெந்த நாடுகள் இவற்றை கொள்வனவு செய்யப் போகின்றன?, எந்த அளவுகளில் அவர்கள் இவற்றை கொள்வனவு செய்யப் போகின்றனர்?. ஏதேனுமொரு வகையில் வெளிநாடுகள் இவற்றை கொள்வனவு செய்யாவிட்டால் உற்பத்திகளுக்கு என்னவாகும்?’ என்ற கேள்விகளே அவரால் அப்போதைய அரசாங்கத்திடம் கேட்கப்பட்டன.
ஆனால் இதில் எந்தவொரு கேள்விக்கும் அன்று பதில் கிடைக்கவில்லை. இன்று நாம் அதே கேள்விகளை ஜனாதிபதி அநுரவிடம் கேட்கின்றோம், மீரிகம பிரதேசத்தில் 64 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாறு கஞ்சா உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு பகிரங்க கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை.
எவ்வாறிருப்பினும் எமக்கு இது குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் நாம் எமது போதை;பொருள் எதிர்ப்பு பிரிவுடன் சென்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்தோம். ஒரு இலை கூட வெளிச் செல்லாமல் கடுமையான பாதுகாப்புடனேயே இந்த உற்பத்தியை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எமது நாட்டுக்கு இது உகந்ததல்ல என்றால், ஏனைய நாடுகளுக்கு மாத்திரம் எவ்வாறு சிறந்ததாகும்? இது மனிதாபிமானமற்ற செயல் அல்லவா என நாம் அமைச்சிடம் கேட்டோம். எதற்காக நாம் தவறான முறைமையின் கீழ் வருமானம் ஈட்டுகின்றோம்? தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தங்காலை ‘ஐஸ்லாந்து’ ஆவதை தடுத்துள்ள அரசாங்கம், மீரிகமையை ‘கஞ்சா தோட்டமாக’ மாற்றுவது சரியா? எனவே தூய்மையாகக் கழுவிய ஆடையை மீண்டும் சேற்றில் இட வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.


