உக்ரைன் போர் விவகாரத்தில், ரஷிய அதிபர் புதினை இதுவரை மென்மையாகக் கையாண்டு வந்த டிரம்ப், சமீபத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பேசிய டிரம்ப், ரஷியா ஒரு காகிதப் புலி என்றும் இழக்கப்பட்ட போரை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
ரஷியாவல் போரை விரைவாக வெல்ல முடியவில்லை என்றும் கேலி செய்த டிரம்ப், உக்ரைன் தனது இழந்த பகுதிகள் அனைத்தையும் ரஷிய படைகளிடம் இருந்து மீட்க முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
மேலும்,"புதினும் ரஷியாவும் பெரும் பொருளாதாரச் சிக்கலில் உள்ளனர்; உக்ரைன் செயல்பட இதுவே சரியான நேரம்" என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஆர்.பி.சி. வானொலியில் பேசுகையில், "ரஷ்யா ஒருபோதும் புலி அல்ல. அது பாரம்பரியமாகவே கரடியாக பார்க்கப்படுகிறது. காகிதத்தால் ஆன கரடி என்று ஒன்று இல்லை. ரஷியா ஒரு உண்மையான கரடி... அதில் காகிதம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று தெரிவித்தார்
மேலும், 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீதான முழு அளவிலான தாக்குதலைத் தொடர்ந்து மேற்குலக நாடுகள் விதித்த தடைகள் காரணமாக சில பதட்டங்கள் இருந்தாலும், ரஷியா பொருளாதார நிலைத்தன்மையுடன் நீடிப்பதாகவும் பெஸ்கோவ் தெரிவித்தார்.


