மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கி வெள்ளித்திரையிலும் கால் பதித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். ராஜா ராணி, காலா மற்றும் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.
பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பலரின் மனதில் பதிந்து தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். அதைத்தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.
கடைசியாக அதர்ம கதைகள் திரைப்படத்தில் நடித்து இருந்தார். கெஸ்ட் மற்றும் தி நைட் திரைப்படத்தில் நடித்து உள்ளார்.
நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைப்பெற்றது. அவரது சிறு வயது நண்பரான நரனீத் மிஸ்ரா என்பவரை கரம் பிடித்தார்.
இந்நிலையில், சாக்ஷி அகர்வால் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சாக்ஷி அகர்வால் ஆர்டர் செய்த உணவு காண்பிக்கப்பட்டுள்ளது.
தான் சைவ உணவை ஆர்டர் செய்ததாகவும், வந்தது சிக்கன் எனவும் ஸ்விக்கி உணவகத்தை டேக் செய்து பகிர்ந்துள்ளார்.
பதிவில், "சுத்த சைவமான எனக்கு சிக்கன் வந்துள்ளது. என் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழில் பேசி சாக்ஷி அகர்வால் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், " கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்விக்கி மூலம் நான் பன்னீர் ஆர்டர் செய்திருந்தேன். ஆனால் சிக்கன் டெலிவரி செய்யப்பட்டது. நான் என் வாழ்நாளில் அசைவம் சாப்பிட்டதே இல்லை. ஆர்டர் செய்த உணவில் மோசமான மணம் வந்ததுடன், பன்னீரின் சுவையிலும் வித்தியாசம் இருந்ததால் சுதாரித்துக் கொண்டு சோதித்து பார்த்தேன். அது சிக்கன் என தெரிந்தவுடன் வாந்தி எடுத்துவிட்டேன்,
நான் முன்வைத்துள்ள இக்குற்றச்சாட்டு, சைவம் - அசைவம் உண்பவர்களுக்கு இடையேயான பிரச்னையோ, இந்துக்கள் இந்து அல்லாதோருக்கு இடையேயான பிரச்னையோ இல்லை. வாடிக்கையாளருக்கும் மோசமான வாடிக்கையாளர் சேவைக்குமான பிரச்னை.
உணவு என்பது ஒருவரின் தனியுரிமை, அதில் அசைவம் சாப்பிடாதது என் உரிமை. உணவு என்பது நம் உணர்வு மட்டுமன்றி, நம்பிக்கை, கலாசாரம், மத உணர்வுகளையும் சார்ந்தது என்பதால் இப்படியான தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.


