”எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பேரழிவுக்கான இழப்பீட்டை பெற கட்சி, அரசியல் பேதங்களைக் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது குறித்து சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது ”எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னர், உயர் நீதிமன்றம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக அறவிட உத்தரவிட்டது. ஆனால் அந்த இழப்பீட்டை வழங்க சிங்கப்பூரில் உள்ள அக் கப்பலின் நிறுவனம் நிராகரித்துள்ளது.
81 கொள்கலன்களில் உயிருக்கு ஆபத்தான பிளாஸ்டிக் துகள்கள், அதிக அளவு அமிலம் கசிந்து சுற்றுச்சூழலில் பெரும் அழிவை ஏற்படுத்தியது.
கட்டார் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இந்த கப்பல் வருகையை நிராகரித்தபோதும், நமது நாட்டு கடல்பரப்பினுள் பயணிக்க அனுமதியளித்ததைத் தொடர்ந்து பெரும் நஷ்டமே ஏற்பட்டது. இன்றும் கூட, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
எனவே, இந்த பிரச்சினையில் நாம் ஒரு நாடாக ஒன்றிணைந்து குறித்த நிறுவனத்திற்கு எதிராக அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்“இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.


