ஜக்கிய தேசிய கட்சியுடன் எந்த கூட்டணியும் செய்து கொள்ளப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.
இது குறித்து பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்” எதிர்க்கால கூட்டணி கனவுகளுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் நாங்கள் கலந்துக்கொள்ளவில்லை. ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவே ஒன்றிணைந்துள்ளோம்.
அந்த மாநாட்டில் பங்குப்பற்றிய சகல அரசியல் கட்சிகளுக்கும் தனித்துவமான கொள்கை உள்ளது. பல கட்சி முறைமையை இல்லாதொழித்து, தனிக்கட்சி முறைமையை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.
இதற்காகவே எதிர்க்கட்சியினர் இலக்கு வைக்கப்படுகிறார்கள். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நிறைவடைந்துள்ளது. போலியான வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
இந்த ஒருவருட காலத்தில் புதிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் ஏதும் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஜனாதிபதியின் ஒருவருட கால ஆட்சியில் போதைப்பொருள் உற்பத்தி நிலையங்கள் மாத்திரமே உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் போதைப்பொருட்கள் கிலோகிராம் கணக்கில் கைப்பற்றப்பட்டது. ஆனால் தற்போது கொள்கலன் கணக்கில் கைப்பற்றப்படுகின்றன“ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விசனம் தெரிவித்துள்ளார்”


