பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிப்பதற்கான காரணங்களை சபையில் முன்வைக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது” அமைச்சர் அருண ஜெயசேகரவுடன் எனக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை.
அவர் நாட்டின் பாதுகாப்பு பிரதி அமைச்சர், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் நிராகரிப்பதற்கான காரணங்கள் என்ன? இதற்கான செயலக அறிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை, உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் உட்பட அனைத்தையும் அரசாங்கம் சபையில் சமர்ப்பிக்கவேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள், நியாயமான விசாரணைகளை கோருகின்றனர். ஆனால் அவை எதுவும் இதுவரையில் நடைபெறவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் தந்தை, சூம் தொழில்நுட்பம் மூலம் ஜெனீவாவில் நடந்து வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இணைந்து கொண்டு நீதியை கோரியுள்ளார்.
இலங்கையில் நடந்து வரும் விசாரணைகள் மூலம் நீதி கிடைக்கவில்லை என அவர் ஜெனிவா கூட்டத்தொடரில் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற விஷயங்கள் நாட்டிற்குப் பொருத்தமானவை அல்ல. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியினை அரசாங்கம் வழங்கவேண்டும் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.


